அதிக நேரம் நீரில் இருந்த பின் கை, கால்களில் சுருக்கங்கள் வருவதற்கு காரணம் என்ன தெரியுமா?
பொதுவாக நாம் நீரில் அதிக நேரம் இருக்கும் பொழுது அல்லது நீரை அதிக நேரம் தொட்டு வேலை செய்யும் பொழுது நமது கைரேகைகள், கால் பாதங்கள் சுருங்கி வித்தியாசமாக மாறுவதை பார்த்திருப்போம். பலருக்கும் ஏன் இவ்வாறு சுருங்குகிறது என்று கேள்வி எழுந்திருக்கலாம். சிலருக்கு இதற்கு பதில் தெரிந்திருக்கலாம். பலருக்கு தெரியாமல் இருக்கலாம். ஏன் இது போன்ற மாற்றங்கள் நமது கை, கால்களில் ஏற்படுகிறது என்பதை குறித்து இன்று நாம் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
சுருக்கங்கள் ஏற்பட காரணம்
முதலில் நாம் அதிக நேரம் நீரில் இருக்கும் பொழுது நமது கால்கள், கைகள் வழுக்கி விடாதபடிக்கு நமது உள்ளங்கை மற்றும் பாதங்களை வலுப்படுத்துவதற்காக நமது சருமம் சுருங்குகிறது. இதன் மூலமாக நாம் நீச்சல் குளத்தில் நடந்தாலும், அடிக்கடி தண்ணீர் படும்படியான வேலைகளைச் செய்தாலும் நம்மால் சுலபமாக அவற்றை செய்ய முடியும். இது ஒரு நோய் கிடையாது என்பதை மட்டும் முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அப்போ ஏன் இவ்வாறு சுருங்குகிறது என்று கேட்டால், நமது சருமத்தில் செபம் என்ற ஒரு எண்ணெய் படலம் இருக்குமாம். இதன் காரணமாக நமது சருமம் பாதுகாப்பாகவும், மென்மையாகவும், ஈரப்பதமாகவும் இருக்குமாம். ஆனால் நாம் அதிக நேரம் நீரில் இருக்கும் பொழுது இந்த செபம் எனும் எண்ணெய் படலம் கழுவப்பட்டு நமது சருமத்தில் நேரடியாக நீர் நுழைய முயற்சிக்கும். இதன் காரணமாக நமது சருமம் சுருங்கத் தொடங்குகிறது.
நமது சருமத்தில் உள்ள நீரின் தன்மை குறைந்த பின்பு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி விடுகிறது. இது மட்டுமல்லாமல் மற்றொரு காரணம் என்னவென்றால் நமது சருமம் கெரட்டினால் ஆனது. இதன் காரணமாக தான் நீண்ட நேரம் தண்ணீரில் இருக்கும் பொழுது நமது தோல் தண்ணீரை உறிஞ்சி சுருங்குகிறதாம். இதற்கு நீர்வாழ் சுருக்கங்கள் என்று பெயராம்.