தகுதிநீக்க தீர்மானம்.. டிரம்ப் மீது வரும் 8 ஆம் தேதி விசாரணை!
டிரம்ப் மீதான தகுதி நீக்க தீர்மானம், செனட் சபைக்கு நாளை மறுநாள் அனுப்பப்படவுள்ளதால்,டிரம்ப் மீதான விசாரணை, வரும் பிப்ரவரி 8-ம் தேதி தொடங்கவுள்ளது.
அமெரிக்கா அதிபர் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், 46 வது அதிபராக அதிபராக ஜோ பைடன் கடந்த 20 ஆம் தேதி பதவியேற்றார். இந்த தேர்தலில் போட்டியிட்ட டிரம்ப், தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் பிடிவாதமாக வந்த நிலையில், வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறினார். மேலும், பைடனுக்கு வெற்றி சான்றிதழ் அளிக்க நாடாளுமன்றத்தில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டம், கடந்த 6-ம் தேதி நடைபெற்றது.
அப்பொழுது டிரம்ப் ஆதரவாளர்கள், தாக்குதல் நடத்தி, வன்முறையில் ஈடுபட்டனர். இதில் 5 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, நூற்றுக்கும் மேற்பட்டோரை அமெரிக்க புலனாய்வு போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தினார்கள். இந்த வன்முறைக்கு டிரம்பின் பேச்சுக்களே காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டத்தை தொடர்ந்து, அதிபர் பதவியில் இருந்து டிரம்பை நீக்க வேண்டும் என்று ஜனநாயக கட்சியினர் வலியுறுத்திக்கொண்டே வந்தனர்.
அதனைதொடர்ந்து, பாராளுமன்ற பிரதிநிதிகள் சபையில் டிரம்புக்கு எதிராக பதவி நீக்க தீர்மானத்தை கொண்டு வந்து, அந்த தீர்மானம் நிறைவேறியது. டிரம்ப் மீதான இந்த தீர்மானம், பாராளுமன்ற மேலவையான செனட் சபையிலும் நிறைவேற்றப்பட வேண்டும். அதன்பின் அந்த தீர்மானத்தின் மீது விசாரணை நடத்தப்படும்.
இந்நிலையில், டிரம்ப் மீதான தகுதி நீக்க தீர்மானம், செனட் சபைக்கு நாளை மறுநாள் அனுப்பப்படவுள்ளது. அதனையடுத்து, தகுதி நீக்க தீர்மானத்தின் மீதான விசாரணை, வரும் பிப்ரவரி 8-ம் தேதி தொடங்குகிறது. இந்த தகுதி நீக்க தீர்மானம் செனட் சபையில் நிறைவேற்றப்பட்டால், டிரம்ப் 2 வது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.