ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி உண்மையா.? எழுந்த சந்தேகம்.!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி உள்ளது. இந்த வைரஸால் இதுவரை உலகம் முழுவதும் 1 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 5 லட்சத்திற்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் ரஷ்யாவை சேர்ந்த செசோனோவ் பல்கலைக்கழக இயக்குனர் Translational Medicine and Biotechnology இயக்குனர் வாடிம் தாராசோவ் அவர்கள் கூறுகையில், செசோனோவ் பல்கலைக்கழகம் கொரோனாவுக்கு எதிரான உலகின் முதல் தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி அதில் வெற்றி பெற்று விட்டதாக தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, செச்செனோவ் பல்கலைக்கழகத்தின் கூற்று குறித்து நிபுணர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. காரணம், ஜூலை 7 -ம் தேதி உலக சுகாதார நிறுவனம் (WHO) ரஷ்ய நிறுவனம் உருவாக்கிய தடுப்பூசி இன்னும் முதல் கட்டத்தில் உள்ளது என்று கூறியது. அதாவது, ஒரு தடுப்பூசி கண்டுபிடிக்க குறைந்தது 3-4 சோதனைகள் மூலம் பாதுகாப்பானது என அறிவிக்கப்படும்.
செசெனோவ் பல்கலைக்கழகம் எப்படி இவ்வளவு..? சீக்கிரம் தடுப்பூசியை உருவாக்கியதாகக் கூற முடியும் என்று நிபுணர்கள் கேட்கிறார்கள். உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி உலகம் முழுவதும் சுமார் 21 தடுப்பூசிகள் தற்போது முக்கியமான சோதனை கட்டத்தில் உள்ளது. அவற்றில் இரண்டு மட்டுமே மனித சோதனைகளின் மேம்பட்ட கட்டத்தை எட்டியுள்ளன.
இதில், சீன நிறுவனமான சினோவாக் தடுப்பூசி மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்-அஸ்ட்ராஜெனெகாவின் வைரஸ் திசையன் தடுப்பூசி ஆகியவை அடங்கும். செசெனோவ் பல்கலைக்கழகத்தின் முன்னணி ஆராய்ச்சியாளர் தடுப்பூசியின் அனைத்து மனித சோதனைகளும் முடிந்துவிட்டதாகக் கூறியிருந்தார். ஆனால், ஆய்வில் 40 தன்னார்வலர்கள் மட்டுமே உட்படுத்தப்பட்டதாக கூறப்பட்டது.
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, இரண்டாம் கட்டத்தில் குறைந்தது 100 பேரையும், மூன்றாம் கட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தன்னார்வலர்களையும் சேர்க்க வேண்டியது அவசியம். இந்த சோதனையை பார்க்கும்போது ரஷ்ய தடுப்பூசி மனித சோதனையில் முதல் கட்டத்தை முடித்துவிட்டது என்பதை இது காட்டுகிறது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
ரஷ்ய தடுப்பூசி சோதனையை ஜூன் 18 ஆம் தேதி தொடங்கி, செச்செனோவ் பல்கலைக்கழகம் அனைத்து சோதனைகளையும் ஒரு மாதத்தில் முடித்து விட்டு, தடுப்பூசி மனித பயன்பாட்டிற்கு பாதுகாப்பானது என்று அறிவித்தது. ஆனால், மலேரியா, எபோலா மற்றும் டெங்கு ஆகிய நோய்க்கான தடுப்பூசிகள் உருவாக குறைந்தது நான்கு ஆண்டுகள் ஆனது என நிபுணர்கள் தெரிவித்தனர். எனவே ரஷ்ய தடுப்பூசி மிகப்பெரிய ஆற்றலைக் கொண்டுள்ளதாகவே இருக்கட்டும்.
ஆனால், விரைவில் மனித பயன்பாட்டிற்கு பாதுகாப்பானது என அறிவிப்பது புத்திசாலித்தனம் அல்ல. எனவே, தடுப்பூசி குறித்து ரஷ்யாவின் கூற்று முற்றிலும் சரியானதல்ல என்று சொல்வது தவறல்ல என நிபுணர்கள் கூறுகின்றனர். ரஷ்ய தடுப்பூசி ஆய்வை, முதல்கட்டமாகத்தான் முடிந்துள்ளது. இதுவரை, மூன்றாம் கட்ட சோதனைக்கு உட்படுத்தப்படாமல் பெரிய அளவிலான எந்த தடுப்பூசியும் பயன்பாட்டிற்கு அங்கீகரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது..