சிறந்த கேப்டன் யார் ?அவரது புகழ் பரவி வருகிறது…
பயிற்சியாளர் ரவி சாஸ்திரி , கேப்டன் விராட் கோலியின் திறமை நாளுக்கு நாள் தீ போல் வளர்ந்து, அணியில் பரவி வருகிறது என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
தென் ஆப்பிரிக்க பயணம் மேற்கொண்ட இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்தபோதிலும் 5-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும், 2-1 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி வெற்றியுடன் நாடு திரும்பியது.
கடந்த 1992-ம் ஆண்டுக்கு பின் இந்திய அணி பல முறை தென் ஆப்பிரிக்காவுக்கு பயணம் மேற்கொண்ட போதிலும் ஒருமுறைகூட தொடரை வென்றதில்லை.
முகம்மது அசாருதீன், சச்சின் தெண்டுல்கர், கங்குலி, ராகுல் டிராவிட், தோனி, ஆகியோர் தலைமையில் கூட தென் ஆப்பிரிக்க மண்ணில் தொடரை இந்திய அணி வெல்ல முடியவில்லை. இந்நிலையில், விராட் கோலி தலைமையில் ஒருநாள், டி20 தொடரை வென்று சாதித்துள்ளது.
அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தலைமையில் இந்திய அணி முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது.
இது குறித்து ரவி சாஸ்திரி நாளேடு ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கேப்டன் விராட் கோலியின் திறமை நாளுக்கு நாள் தீ போல் வளர்ந்து, அணியில் பரவி வருகிறது. அவரின் தலைமையில் அணி செயல்படும்போது தொடக்கத்தில் இருக்கும் வேகம் நேரம் செல்லச் செல்ல வீரர்கள் மத்தியில் பரவி அனைவரும் உத்வேகமாகச் செயல்படுகிறார்கள்.
கிரிக்கெட் விளையாட்டின் முன் இன்னும் நாம் மாணவர்களாக கற்றுக்கொண்டுதான் இருக்கிறோம். இந்த தொடரில் டெஸ்ட் தொடரில் அடைந்த 2 தோல்விகளால்கூட அதிகமான பாடங்களை கற்றுக்கொண்டுள்ளோம். அடுத்த 18 மாதங்களில் இந்திய அணி யார் என்பதை வெளிப்படுத்துவோம் என்று தென் ஆப்பிரிக்காவுக்கு போகும்முன் நான் கூறினேன்.
ஆனால், 15 மாதங்களிலேயே இந்திய அணியின் திறமையை உலகிற்கு தெரியவரும் என்பதை நான் அறிவேன். வெற்றி, தோல்வி எதுவாக இருந்தாலும், இந்தியா சிறந்த அணியாக மாறும். அந்த நம்பிக்கை அணி மீது இருக்கிறது.
அதேசமயம், இந்திய அணி எப்போதும் வெற்றி பெறுவதையே நாம் விரும்புகிறோம். ஒரு சிலர் மட்டுமே வெற்றி, தோல்வியை சமமாக ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால், சில ரசிகர்கள் இந்திய அணிதோல்வி அடைந்தால் கூட மகிழ்ச்சி அடைகிறார்கள். இரு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி தோல்வி அடைந்தபோது எங்களுக்கு நெருக்கடிகள் ஏற்பட்டன.
ஆனால், அந்த இரு போட்டிகளிலும் சாதகமான அம்சங்களை மட்டும் எடுத்து, அடுத்த போட்டியை எதிர்கொண்டு வெற்றி பெற்றோம். ஜோகன்ஸ்பர்க் போன்ற மோசமான ஆடுகளத்தில் எந்த அணியும் முதலில் ஆடி வெற்றி பெறுவது என்பது சாத்தியமில்லாதது.”
இவ்வாறு ரவி சாஸ்திரி தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.