விராட் கோலி புதிய சாதனை! தோனியின் சாதனையை முறியடித்தார் ….
ஒருநாள் போட்டியை பொறுத்தவரை அவர் புதிய சாதனைகள் பல்வேறு படைத்து வருகின்றார் .தற்போது டெஸ்டில் அவர் ஒரு சாதனை படைத்துள்ளார் .
தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 2-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரை கைப்பற்றிய நிலையில், 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜோகன்ஸ்பர்க் நகரில் உள்ள வாண்டரர்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில் 3-வது நாள் ஆட்டமான நேற்று இந்திய அணி தனது 2-வது இன்னிங்ஸை ஆடியது. அப்போது, கேப்டன் விராட் கோலி 79 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். 41 ரன்கள் சேர்த்ததன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருந்து, அதிக ரன் சேர்த்த இந்திய வீரர் எனும் தோனியை சாதனையை விராத் கோலி முறியடித்தார்.
இந்திய அளவில் டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக இருந்து அதிக ரன் சேர்த்தவர் என்ற சாதனைப் பட்டியலில் தோனி தான் இதுவரை முதலிடத்தில் இருந்தார். 96 இன்னிங்ஸ்களுக்கு கேப்டனாக இருந்த தோனி 3 ஆயிரத்து 454 ரன்கள் சேர்த்து இருந்தார். ஆனால் விராட் கோலி 57 இன்னிங்னிஸ்களுக்கு கேப்டனாக இருந்து 3 ஆயிரத்து 456 ரன்கள் சேர்த்து தோனியின் சாதனையை முறியடித்தார்.
அதுமட்டுமல்லாமல், டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டன்களாக இருந்த சுனில் கவாஸ்கர்(3,449 ரன்கள்), முகம்மது அசாருதீன்(2,856 ரன்கள்), சவுரவ் கங்குலி(2,561 ரன்கள்) ஆகியோரின் சாதனைகளையும் விராட் கோலி தகர்த்தெறிந்து முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
29 வயதாகும் விராட் கோலி, 66 டெஸ்ட் போட்டிகளில் இதுவரை விளையாடி, 5 ஆயிரத்து 554 ரன்கள் சேர்த்துள்ளார். அதில் இந்தியாவில் நடந்த 19 டெஸ்ட் போட்டிகளில் 2 ஆயிரத்து 62 ரன்களும், வெளிநாடுகளில் நடந்த 16 போட்டிகளில் ஆயிரத்து 394 ரன்களும் என மொத்தம் 3,456 ரன்களை கோலி சேர்த்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல், வாண்டரரஸ் டெஸ்ட் போட்டி தவிர்த்து இதுவரை கோலி தலைமையில் இந்திய அணி 34 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அதில் 20 வெற்றிகளைப் பெற்றுள்ளது.
கேப்டனாக இருந்து விரைவாக 3 ஆயிரம் ரன்களை கோலி எட்டியதன் மூலம் அவரின் ரன் சராசரி என்பது 65.20 ஆக இருக்கிறது. முதலிடத்தில் கிரிக்கெட்டின் பிதாமகர் டான் பிராட்மன்(101.51) இருக்கிறார். 2-ம் இடத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 76.45 ரன்கள் சராசரியுடன் இருந்து வருகிறார். கோலியின் ரன் வேட்டை இதே வேகத்தில் தொடர்ந்தால், ஸ்மித்தை முறியடித்து 2-ம் இடத்துக்கு முன்னேறிவிடுவார் என்பதில் ஐயமில்லை.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள் …