தோனியின் பேச்சை மீறியதால் ரெய்னாக்கு கிடைத்த பதிலடி!
தோனியிடம் கேப்டன் பதவி இல்லாவிட்டாலும் கூட மிகச்சிறந்த விக்கெட் கீப்பர், பேட்ஸ்மன் என்ற இரு தகுதிகளை பறித்து விடமுடியாது. தனது அனுபவங்களை அவ்வப்போது இளம் வீரர்களுக்கு வழங்கி அவர்களை ஊக்கப்படுத்துவதிலும் தோனிக்கு நிகர் அவரேதான்.
அப்படித்தான் தோனி அளித்த அறிவுரைகளை கேட்காமல் பந்துவீசிய சுரேஷ் ரெய்னாவுக்கு சரியான பதிலடி கிடைத்தது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி மற்றும் 3-வது டி20 போட்டியின் போது, தோனி அளித்த ஆலோசனையை ஏற்காத சுரேஷ் ரெய்னாவுக்கு தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மன் பதிலடி கொடுத்துள்ளார்.
கேப் டவுன் நகரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி மற்றும் 3-வது டி20 போட்டியில் இந்திய அணி, விராட் கோலி இல்லாமல் கலந்து கொண்டது. இருந்தாலும், இளம் வீரர்கள் பந்துவீசும்போது விக்கெட் கீப்பிங் பணியில் இருக்கும் தோனி அவ்வப்போது பந்து எப்படி வீச வேண்டும் என்பது குறித்து ஆலோசனைகளை சத்தமாகக் கூறிக்கொண்டே இருப்பார்.
இந்த ஆலோசனைகள் ஸ்டெம்பில் உள்ள ஒலிவாங்கி (மைக்) மூலம் வர்ணனை பிரிவில் இருப்பவர்களால் கேட்க முடியும். அப்படித்தான் 3-வது டி20 போட்டியின் போதும் இந்த சம்பவம் நடந்தது.
14-வது ஓவரை சுரேஷ் ரெய்னா வீச வந்தார். ரெய்னா வீசிய முதல் 3 பந்துகளில் 3 ரன்கள் சென்றுவிட்டன. அடுத்த பந்துகளில் ரன்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக தோனி அவரிடம் ஆலோசனை கூறினார்.
ஏனென்றால், அக்சர் படேல் வீசிய முதல் ஓவரில் ஏற்கெனவே 16 ரன்கள் சென்றுவிட்டதால் இந்திய அணி ரன்களை கட்டுப்படுத்த வேண்டிய நெருக்கடியில் இருந்தது.
இதனால், ரெய்னாவுக்கு கேட்கும் வகையில் ‘பந்தை வேகமாக வீசாதீர்கள்’, ‘ஸ்டெம்புக்கு நேராக வீசாதீர்கள்’ என்று 3 முறை தோனி சத்தமாக இந்தியில் கூறினார். தோனியின் இந்த வார்த்தை ஸ்டெம்பில் உள்ள மைக் வழியாக வர்ணனையில் உள்ளவர்களுக்கு கேட்டது.
தோனி கூறிய வார்த்தைகள் பீல்டிங்கில் இருந்த வீரர்களுக்கும் கேட்டு இருக்கும், ஆனால், அதை காதில் வாங்காமல், தோனி கூறியதற்கு நேர் எதிராக சுழற்பந்துவீச்சாளர் ரெய்னா பந்தை நேராகவும், வேகமாகவும் வீசினார்.
விளைவு, தென் ஆப்பிரிக்க வீரர் கிறிஸ்டியன் ஜோன்கர் அடுத்தடுத்து இரு பவுண்டர்கள் விளாசி ரெய்னாவின் தவறுக்கு பாடம் கற்பித்தார். தோனி சத்தமாக அறிவுரை கூறியதும், அதை காதில் வாங்காமல் ரெய்னா பந்துவீசி அடுத்தடுத்து பவுண்டர்கள் விளாசப்பட்ட வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.