தடுப்பூசி குறித்து தவறான ட்வீட் செய்தால் நீக்கம் – ட்விட்டர்..!
உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் நோக்கில் பல நாடுகள் தீவிர முயற்சியில் களமிறங்கியுள்ளது. கொரோனா தொற்றுநோயை தடுக்க தடுப்பூசி போட தொடங்கப்பட்டுள்ளது.
சமீபத்தில், அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்தது. இந்த தடுப்பூசியை போடும் பணி பிரிட்டனில் தற்பொழுது தொடங்கியது. இந்த தடுப்பூசியை இந்தியாவிலும் கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுபோன்ற சூழ்நிலையில், தடுப்பூசி தொடர்பான தவறான தகவல்களை தனது தளத்திலிருந்து நீக்குவதாக சமூக ஊடக தளமான ட்விட்டர் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, ட்விட்டர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது, கொரோனா வைரஸ் தொடர்பான தவறான தகவல்களை ட்விட்டர் தளத்திலிருந்து அகற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசியின் விளைவுகள் குறித்த பதிவுகள், தடுப்பூசி மக்களுக்கு தீங்கு விளைவிப்பதற்கோ அல்லது கட்டுப்படுத்துவதற்கோ பயன்படுத்தப்பட்டது என்று ஆதாரமற்ற தகவலை வெளியிடுவது போன்றவற்றை நீக்குவதாக ட்விட்டர் தெரிவித்துள்ளது.
இந்த திட்டம் வரும் புதன்கிழமை (டிசம்பர் 23) முதல் செயல்படுத்தும் என்று ட்விட்டர் தெரிவித்துள்ளது. தடுப்பூசி தொடர்பான தவறான தகவல்களை நீக்குவதாக பேஸ்புக் மற்றும் யூடியூப் நிறுவனங்களும் ஏற்கனவே அறிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.