‘ஆபத்தான நாள்’.! 3000 வீரர்கள்,1300 வீடுகள், ஒரு லட்சம் மக்கள்..காட்டுதீயால் தவிக்கும் ஆஸ்திரேலியா.!
- ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாகாணத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக 100-க்கும் அதிகமான இடங்களில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது.
- 40 டிகிரி செல்சியஸுக்கு அதிகமான வெப்பம், குறைவான ஈரப்பதம், பலத்த காற்று, இவைதான் இப்போதைய சூழலுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக 100-க்கும் அதிகமான இடங்களில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. இதனை அணைக்க ஏறத்தாழ 3000 தீயணைப்பு வீரர்கள் களத்தில் ஈடுபட்டு தீயை அணைக்க போராடி வருகின்றனர். தென் கிழக்கு ஆஸ்திரேலியாவில் பல பகுதிகளில் வெப்பம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இன்று (சனிக்கிழமை) 40 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும் என வானிலை மையம் கூறி உள்ளது.
இதன் காரணமாக சனிக்கிழமையை ‘ஆபத்தான நாள்’ என்றும் கூறி உள்ளனர். காட்டுத்தீ பற்றி எரியும் பகுதிகள் அருகே இருக்கும் மக்களை வெளியேற நியூ சவூத் வேல்ஸ் பிரிமீயர் கிளாடிஸ் வலியுறுத்தி உள்ளார். செப்டம்பரில் பரவ தொடங்கிய காட்டுத்தீயில் சிக்கி இதுவரை 20 பேர் பலியாகி உள்ளனர், டஜன் கணக்கான மக்கள் காணாமல் போய் உள்ளனர், 1300 வீடுகள் எரிந்து சாம்பலாகின. மேலும் ஒரு லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அதனிடையே புவிவெப்பமயமாதல் தான் இந்த காட்டுத்தீக்கு முக்கிய காரணமென சொல்லப்படுகிறது. ஆனால் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், காட்டுத்தீக்கும் காலநிலை மாற்றத்துக்கும் நேரடி தொடர்பில்லை என்று முன்னர் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் 40 டிகிரி செல்சியஸுக்கு அதிகமான வெப்பம், குறைவான ஈரப்பதம், பலத்த காற்று, இவைதான் இப்போதைய சூழலுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.