பாகிஸ்தானை விட்டு 15 நாளில் வெளியேற சிந்தியா டி. ரிச்சிக்கு உத்தரவு.!
அமெரிக்க நாட்டைச் சேர்ந்த சமூக ஊடக ஆர்வலர் சிந்தியா டி. ரிச்சியின் விசா நீட்டிப்பு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு, 15 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறும்படி அவருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சிந்தியா டி. ரிச்சி கூறுகையில், உள்துறை அமைச்சகம் கடந்த 10 ஆண்டுகளில், எனது விசா விண்ணப்பத்தை நிராகரித்தது இல்லை, முதன்முறையாக நிராகரித்துள்ளது, இதற்கான எந்த காரணமும் கூறப்படவில்லை, இந்த முடிவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய உள்ளதாக அவர் கூறினார்.
அமெரிக்க நாட்டைச் சேர்ந்த சமூக ஊடக ஆர்வலர் சிந்தியா டி. ரிச்சி கடந்த பத்தாண்டுகளாக பாகிஸ்தானில் வசித்து வருகிறார். சமீபத்தில், பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) ரிச்சிக்கு எதிராக இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அதில், மார்ச் 2 ம் தேதியுடன் சிந்தியா டி. ரிச்சி விசா காலாவதியான பின்னரும் பாகிஸ்தானில் தங்கியிருப்பதாகக் கூறினார்.
இந்த வழக்கில் ஜூலை 10 ம் தேதி நீதிமன்றம் ரிச்சி பாகிஸ்தானில் தங்குவது குறித்து உள்துறை அமைச்சகம் முடிவு செய்யுமாறு உத்தரவிட்டது. பின்னர், ஜூலை 17 அன்று, அமைச்சகம் சார்பில் பதில் மனு ஓன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், பாகிஸ்தானில் ஆகஸ்ட் 31 வரை நாட்டில் தங்க அனுமதி என கூறியது.
இந்நிலையில், சிந்தியா டி. ரிச்சி விசா நீட்டிப்பு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு, 15 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறும்படி அவருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சிந்தியா டி. ரிச்சி சமீபகாலமாக பல பாகிஸ்தான் தலைவர்கள் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ குறித்து அவதூறான கருத்துக்களை வெளியிட்டதாக பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) குற்றம் சாட்டியது. மேலும், ஒருமுறை சிந்தியா டி. ரிச்சி பேஸ்புக் நேரலையில் பேசியபோது , பாகிஸ்தான் முன்னாள் உள்துறை மந்திரி ரெஹ்மான் மாலிக் 2011 ஆம் ஆண்டு தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் குற்றம் சாட்டினார்.
முன்னாள் பிரதமர் யூசப் ராசா கிலானி மற்றும் முன்னாள் சுகாதார மந்திரி மக்தூம் ஷாஹாபுதீன் ஆகியோர் இஸ்லாமாபாத்தில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்குள் உடல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் அவர் கூறி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.