புதிய வகை கொரோனா பரவலால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படலாம் – இங்கிலாந்து பிரதமர் எச்சரிக்கை!
இங்கிலாந்தில் அதிகரித்து வரும் வீரியமிக்க புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படலாம் என பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஒரு வருட காலமாக உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது வரை பரவிக் கொண்டிருந்தாலும், முன்புபோல் அல்லாமல் சற்று தளர்ந்து காணப்பட்டு இருந்தது. ஆனால் தற்பொழுது அந்த கொரோனா வைரஸை விடவும் அதிக வீரியமுள்ள கொரோனா வைரஸ் பல நாடுகளில் பரவி வருகிறது. ஏற்கனவே கொரானா வைரஸ் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. இந்த நாட்டில் தற்பொழுது புதிய வகை கொரோனா வைரஸ் இன்னும் அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, அங்கு உள்ள பள்ளிகள் மூடப்பட்டு உள்ளது.
மேலும், நாடு முழுவதும் சில வாரங்களுக்கு பள்ளிகளும் மூட வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக பேசிய பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்கள், கொரோனா வைரஸ் பாதிப்பு மிகக் குறைவாக உள்ள பகுதிகளில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பலாம் என கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் பள்ளிகள் பாதுகாப்பானவை அதை வலியுறுத்துவது மிக முக்கியம் எனவும் தெரிவித்துள்ளார். அதே சமயம் வரும் வாரங்களில் நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படலாம் எனவும் எச்சரித்துள்ளார். சில வாரங்களில் நாம் பலவிதமான கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வண்டிய சூழ்நிலை வரலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.