இலங்கையில் ஜூன் 7ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!

இலங்கையில் வருகின்ற 28-ஆம் தேதியுடன் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவுக்கு வர உள்ள நிலையில், தற்போது ஜூன் 7-ஆம் தேதி வரையும் இந்த ஊரடங்கு நீக்கப்படுவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.
உலகம் முழுவதிலுமே கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில் தீவு நாடான இலங்கையிலும் தினமும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இலங்கையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இலங்கையில் 2,971 பேர் கிட்டத்தட்ட மூவாயிரம் பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக இலங்கையில் ஏற்கனவே 28 ஆம் தேதி வரை கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 28-ஆம் தேதியுடன் இந்த ஊரடங்கு முடிவுக்கு வர உள்ள நிலையில், தற்பொழுது கோத்தபய ராஜபக்சே தலைமையிலான கூட்டத்தில் மருத்துவ நிபுணர்கள் அளித்த பரிந்துரையின் அடிப்படையில் ஜூன் 7ஆம் தேதி வரையிலும் இந்த ஊரடங்கு நீடிக்கப்படுவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக இலங்கை அரசு வெளியிட்டுள்ள புதிய பயண கட்டுப்பாட்டின் படி ஜூன் 7-ஆம் தேதி வரை இந்த கட்டுப்பாடுகள் தொடரும் எனவும், ஆனால் மே 25 மற்றும் மே 31, ஜூன் 4 ஆகிய தேதிகளில் மட்டும் கட்டுப்பாடு தளர்வு அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒருவர் மட்டும் அருகிலுள்ள கடைகளுக்கு சென்று அத்தியாவசிய பொருட்களை வாங்க அனுமதி கொடுக்கப் போவதாகவும், வாகனங்களில் பயணம் செய்வதற்கு யாருக்கும் அனுமதி கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அத்தியாவசிய பொருட்களை வாங்க வீடுகளை விட்டு வெளியே சென்று பொருட்களை வாங்க கூடியவர்கள் விரைந்து வாங்கிக் கொண்டு உடனடியாக வீடு திரும்ப வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் மருந்தகங்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதுடன் ஊரடங்கு காலத்தில் தொடர்ந்து ஏற்றுமதி நடவடிக்கைகள் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.