தென்னாப்பிரிக்காவில் தொடங்கிய கொரோனாவின் 3 ஆம் அலை – சுகாதாரத்துறை அறிவிப்பு..!
கொரோனாவின் 3 ஆவது அலை தென்னாப்பிரிக்காவில் தொடங்கியிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனாவின் இரண்டாம் அலையால் பெரிய பாதிப்புகளை சந்தித்து வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவால் இறந்துள்ளனர். முதல் அலையை விட இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் 3 ஆம் அலை தொடங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தென்னாப்பிரிக்காவில் இதுவரை 40 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1 லட்சத்திற்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இங்கு 3 ஆம் அலை தொடங்கியிருப்பது குறித்து அந்நாட்டு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாட்டில் கொரோனாவின் 3 ஆவது அலை ஆரம்பமாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 9,100 பேர் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் தொற்று எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளோம். ஆனால், நாட்டில் தடுப்பூசி பற்றாக்குறை நிலவுவது கவலையளிக்கும் செய்தியாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளனர்.