இங்கிலாந்தில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா! மூன்றடுக்கு ஊரடங்கு அமல்!
இங்கிலாந்தில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா வைரஸால், மூன்றடுக்கு ஊரடங்கு அமல்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இங்கிலாந்தில் மீண்டும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகின்ற நிலையில், அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் நாடாளுமன்றத்தில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிவிப்பின்படி, தொற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நடுத்தரம், அதிக அளவு, மிக அதிக அளவு என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. மிக அதிக அளவு பிரிவாகக் அறிவிக்கப்பட்ட பகுதிகளில், வீட்டிற்குள் விருந்தினர்களை தங்க வைக்கவோ அல்லது நண்பர்களின் வீட்டிற்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், நடுத்தர அளவில் வேலைகளை பொருத்த அளவில், முடிந்த வரை வீட்டில் இருந்து வேலை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிக அளவு பிரிவு திருமண நிகழ்ச்சி, இறுதி சடங்கு ஊர்வலத்தில் அதிகபட்சமாக 30 பேரை மட்டுமே கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வருவதில் எவ்வித மகிழ்ச்சியும் இல்லை என்றும், ஆனால் அரசாங்கம் உயிர்களை காப்பாற்ற தீவிரமாக இயங்க வேண்டியுள்ளது என்றும் அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதற்கும், தற்போது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள், ஆறு மாத காலத்துக்கு பொருந்தும் என்றும், 28 நாட்களுக்கு ஒருமுறை விதிமுறைகள் மறுபரிசீலனை செய்யப்படும் என்றும் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.