கொரோனா இரண்டாம் அலை எதிரொலி : தள்ளிவைக்கப்பட்ட எம்ஜிஆர் மகன் பட வெளியீடு!
இயக்குனர் பொன்ராம் அவர்களின் இயக்கத்தில் உருவாகியுள்ள எம்ஜிஆர் மகன் பட வெளியீடு கொரோனாவின் இரண்டாம் அலை காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் பொன்ராம் அவர்களின் இயக்கத்தில் நடிகர் சசிகுமார், சமுத்திரகனி, சத்தியராஜ் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கக்கூடிய புதிய பொழுதுபோக்கு திரைப்படம் தான் எம்ஜிஆர் மகன். இந்த படத்தில் சத்யராஜ் மற்றும் சசிகுமார் அப்பா மகனாக நடிக்க, இருவருக்குமிடையில் ஏற்படக்கூடிய சண்டை எப்படி இடையில் பாசமாக மாறுகிறது என்பது குறித்து இந்த படத்தில் கூறப்பட்டுள்ளது. வருகிற ஏப்ரல் 23-ஆம் தேதி திரையரங்கில்இந்த படம் வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது இந்தியா முழுவதிலும் கொரோனா வைரஸ் அதிகரித்துள்ள நிலையில் நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு கொண்டிருக்கிறது.
இந்நிலையில் திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது. ஆனால், தினமும் பத்தாயிரத்திற்கும் அதிகமாக தமிழகத்தில் கொரோனா தொற்று ஏற்படுவதால் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு அடைப்பு மற்றும் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை ஊரடங்கு என கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. எனவே பட வெளியீடு தள்ளி வைக்கப்பட்டு இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இது குறித்து தெரிவித்துள்ள படக்குழுவினர், எம்ஜிஆர் மகன் திரைப்படம் ஏப்ரல் 23 அன்று வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், தற்பொழுது கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தயாரிப்பு நிறுவனம் சார்பில் அனைவரின் நலனையும் கருத்தில் கொண்டு படம் தள்ளி வைக்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.