கொரோனாவுக்கு சிகிச்சை அளித்து வந்த இரட்டை சகோதரிகளின் உயிரை பறித்தது கொரோனா.!
பொது மருத்துவமனையில் கொரோனா அவசர சிகிச்சை பிரிவில் செவிலியர்களாக பணியாற்றிவந்த இரட்டை சகோதரிகளான கேட்டி டேவிஸ், எம்மா டேவிஸ் இருவரும் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.
கொரோனா தொற்றால் உலக நாடுகள் பல்வேறு வகையில் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. உலக மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் 1,48,377 இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர்.
இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் நகர பொது மருத்துவமனையில் இரட்டை சகோதரிகளான கேட்டி டேவிஸ், எம்மா டேவிஸ் என இருவரும் செவிலியர்களாக பணியாற்றி வந்தனர்.
இவர்கள் இருவரும் ஒன்றாக நர்சிங் படித்து, ஒரே மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தனர். கொரோனா அவசர சிகிச்சை பிரிவிலும் அர்ப்பணிப்போடு வேலைபார்த்து வந்தனர். பின்னர் இருவருக்குமே கொரோனா வைரஸ் தொற்றி கொண்டது.
இருவருக்கும் அதே மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி கேட்டி கடந்த செவ்வாய்க்கிழமையும், எம்மா டேவிஸ் நேற்று முன்தினமும் உயிரிழந்தனர்.
உலகிற்கு இருவரும் ஒன்றாகவே வந்து, இப்போது ஒன்றாகவே உலகைவிட்டு பிரிந்து சென்றனர். அவர்களின் இறப்பு அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.