பைசர் கொரோனா தடுப்பு மருந்து எடுத்த ஒரே வாரத்தில் செவிலியருக்கு கொரோனா தொற்று!
கலிபோர்னியாவில் உள்ள செவிலியர் ஒருவர் கடந்த வாரம் பைசர் கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக் கொண்டதை அடுத்து, அவருக்கு தற்பொழுது தொற்று ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதிலும் தனது வீரியத்தை குறைத்துக் கொள்ளாமல் தற்பொழுது வரையிலும் பரவி கொண்டே இருக்கும் நிலையில், பல்வேறு இடங்களில் கொரோனாவிற்கான தடுப்பு மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் கண்டறியும் ஆய்வுகளும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. சில இடங்களில் ஆய்வுகளில் கண்டறியப்பட்ட தடுப்பூசிகள் தன்னார்வலர்களுக்கு செலுத்தப்பட்டு இறுதிக்கட்ட பரிசோதனைகள் நடைபெற்று வருகிறது. அதில் ஒன்றாக கலிபோர்னியாவில் உள்ள செவிலியர் ஒருவருக்கு கடந்த வாரம் பைசர் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது.
45 வயதான இந்த செவிலியருக்கு அறிகுறிகள் ஏதும் இல்லாமல் தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த பைசர் நிறுவனத்தின் தடுப்பு மருந்து பிரிட்டானியா, அமெரிக்கா மற்றும் கனடா உள்ளிட்ட பல இடங்களில் அவசரகால பயன்பாட்டிற்காகவும் பயன்படுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இது எதிர்பாராத நிகழ்வாக இருக்கிறது என மருத்துவ நிபுணர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஏற்கனவே அமெரிக்கா பல்வேறு மாகாணங்களுக்கு பைசர் கொரோனா தடுப்பு மருந்துகளை அனுப்பும் முயற்சியை தொடங்கியுள்ளது.எனவே, நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இந்த கொரோனா தடுப்பு மருந்துகளை உபயோகித்து வருகின்றனர், அதில் ஒரு செவிலியருக்கு தற்பொழுது கொரானா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.