அமெரிக்காவில் இரண்டு வாரங்களில் 97,000 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா.. ஆய்வில் வெளியான தகவல்!
அமெரிக்கா முழுவதும், ஜூலை மாத கடைசி இரண்டு வாரங்களில் 97,000 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.
சீனாவில் பரவதொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம், தற்பொழுது உலக நாடுகளை உலுக்கி வருகிறது. இந்த வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த, தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் நோக்கில் பல உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.
அதில் சில நாடுகளில் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு, மனிதர்கள் மீதான சோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், அமெரிக்கா முழுவதும் 97,000 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதியானதாக நடத்திய ஆய்வில் தெரியவந்தது.
அமெரிக்காவின் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை சங்கம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி, ஜூலை மாத கடைசி இரண்டு வாரங்களில் அமெரிக்கா முழுவதும் 97,000 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதியானது.
அதுமட்டுமின்றி, ஜூலை 16 -ம் தேதி முதல் 30 வரை 97,078 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதியானதாகவும், அது வழக்கத்தை விட 40 சதவீதம் அதிகமானது என சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 1,00,000 குழந்தைகளில் 447 குழந்தைகளுக்கு கொரோனா உறுதியாகும் எனவும், மொத்த மாநிலங்களில் நடத்தப்படும் சோதனைகளில் 3 முதல் 11.3 சதவீத குழந்தைகள் உள்ளனர்.
கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட குழந்தைகளில் 3.6 சதவீதம் முதல் 18.4 சதவீத பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்படுகிறது. மருத்துவமனையில் 0.6 சதவீதம் முதல் 3.7 சதவீதம் வரை குழந்தைகள் சிகிச்சை பெற்று வருவதாகவும், அதில் 0 முதல் 0.8 சதவீத குழந்தைகள் வரை உயிரிழந்து வருவதாகவும் ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.