கொரோனா உயிரிழப்பு விவகாரம்.. நேருக்கு நேர் விவாதத்தில் இந்தியாவை விமர்சித்த டிரம்ப்!
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நெருங்கும் நிலையில், அதிபர் வேட்பாளராக பைடன் – டிரம்ப் நேருக்கு நேர் உரையாற்றி வருகின்றனர். அப்பொழுது அதிபர் டிரம்ப், இந்தியாவை விமர்சித்துள்ளார்.
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நெருங்கவுள்ள நிலையில், தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் முக்கியமாக இரண்டு கட்சிகள் கருதப்படுகிறது. அது ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி. ஜனநாயக கட்சியின் சார்பாக முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன் போட்டியிடுகிறார். மேலும், குடியரசு கட்சி சார்பாக தற்பொழுதுள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார்.
அமெரிக்காவில் தேர்தல் தொடங்கும் முன்னே, அதிபர் வேட்பாளர்களுக்கிடையே 3 நேருக்கு நேர் விவாதங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி முதல் விவாதம், ஓஹிகோ மாகாணத்தில் காரசாரமாக நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தில் நடுவராக கிறிஸ் வாலஸ் பங்கேற்றார். இந்த விவாதத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் மற்ற நாடுகளை விட அமெரிக்காவில் அதிகமாக இருப்பதாக பைடன் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த டிரம்ப், இந்தியா மற்றும் சீனாவில் கொரோனாவால் எத்தனை பேர் உயிரிழந்துள்ளார் என்பது யாருக்கும் தெரியாது எனவும், கொரோனா இறப்புகள் குறித்த புள்ளி விவர பட்டியலை இந்தியாவே பகிர்ந்து கொள்ளவில்லை என்று கூறினார்.
அதுமட்டுமின்றி, உலகில் புவி வெப்பமயமாதலில் 15 சதவீத பங்கை அமெரிக்கா வகிக்கிறதாக பைடன் தெரிவித்த நிலையில், மாசை காற்றுடன் சீனா கலப்பதாகவும், அதனை ரஷ்யா செய்கிறது. இந்தியாவும் செய்கிறது என கூறினார். மேலும், அமெரிக்காவை விட புவி வெப்பமடைதலுக்கு இந்தியா தான் காரணம் என தெரிவித்துள்ளார். டிரம்பின் இந்த கருத்து, புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.