கொரோனா உயிரிழப்பு விகிதம் பூஜ்ஜியம்! கொரோனா வைரஸை கட்டுபடுத்தி வெற்றிகண்ட வியட்நாம்!
வியட்நாம் கொரோனாவை வென்று வெற்றி காண்டது எப்படி?
சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளை தாக்க துவங்கியது. இந்நிலையில், கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுக்குள் கொண்டுவர இயலாமல், அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளே திணறி வருகின்ற நிலையில், வியட்நாம் கொரோனாவை வென்று வெற்றி கண்டுள்ளது.
வியட்நாமை பொறுத்தவரையில், கொரோனா உயிரிழப்பு விகிதம் பூஜ்யமாக தான் உள்ளது. வியட்நாம் 9.7கோடி மக்கள் தொகையை கொண்டது. அங்கு, சீனாவில் கொரோனா வைரஸ் பரவுவதாக கூறப்பட்ட உடனே, வியட்நாம் – சீனா எல்லையை அந்நாட்டு அரசு உடனே மூடியது.
இருப்பினும் வியட்நாமில் மொத்தம் 270 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்று ஏற்பட்ட உடனே, அங்கு அனைத்து போக்குவரத்தும் முடக்கப்பட்டு அந்நாட்டு அரசு பொதுமுடக்கத்தை அமல்படுத்தியது. மேலும், தனிமனித இடைவெளி கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமுடக்கத்தை கடுமையாக்கிய வியட்நாம் அரசு, பல வழிகளில் மக்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. பொதுமுடக்கத்தை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. வேலையிழந்த தொழிலாளர்களுக்கு அந்நாட்டு அரசு ஏடிஎம் மூலம் உணவு பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்தது.
வியட்நாமில் ஜனவரி மாதம் கொரோனா பரிசோதனையில், ஒருவருக்கு முதன்முதலாக கொரோனா இருப்பது தெரியவந்ததையடுத்து, பரிசோதனைகளை தீவிரப்படுத்தியது. அதுமட்டுமல்லாமல், உள்நாட்டிலேயே மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள கருவிகளை உருவாக்கியுள்ளது.
மேலும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் முழு மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தப்பட்டனர். தொற்று ஏற்பட்டவர்களுடன் இருந்தவர்களை உடனே கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தியுள்ளனர். இவ்வாறு அரசு எடுத்த அனைத்து நடவடிக்கைகளுக்கும் மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்துள்ளனர்.
வியட்நாமில் ஏற்கனவே சார்ஸ் வைரஸை கையாண்ட அனுபவம், இந்த கொரோனா வைரஸை விரட்டியடிக்கவும் கை கொடுத்துள்ளது. அதுமட்டுமல்லாமல், இங்குள்ள ஒற்றை கட்சி ஆட்சி முறையும் இதற்க்கு காரணமாக கூறுகின்றனர் வல்லுநர்கள். இதனையடுத்து, அண்மைக்காலமாக யாருக்கும் தொற்று ஏற்படாததால், அந்நாட்டு அரசு ஊரடங்கை தளர்த்தியுள்ளது. வியட்நாம் கொரோனாவை வெற்றிக் கொள்ள அரசின் துரித நடவடிக்கையும், மக்களின் முழு ஒத்துழைப்பும் தான் இதற்க்கு காரணம் என்கின்றனர்.