நெதர்லாந்தின் தலைநகர் ஆம்ஸ்டெர்டாமில் PEGIDA அமைப்பு நடத்திய ஊர்வலத்தில் மோதல்…!!
நெதர்லாந்தின் தலைநகர் ஆம்ஸ்டெர்டாமில் PEGIDA என்ற வலதுசாரி இனவாத அமைப்பு ஊர்வலம் நடத்தியது. பெகிடா, ஜேர்மனியில் ஒரு இஸ்லாமிய எதிர்ப்புவாத அமைப்பாக ஆரம்பித்தது. அது வெளிநாட்டவரை வெறுக்கும் இனவாதிகள், நவ நாஜிகளின் முகமூடியாக உள்ள வெகுஜன அமைப்பாகும்.
ஆம்ஸ்டர்டாம் பெகிடா ஊர்வலத்தில் அதிக பட்சம் 20 பேர் தான் கலந்து கொண்டிருப்பார்கள். ஆனால் அவர்கள் நின்ற இடத்தை யாரும் நெருங்க விடாது, பொலிஸ் பாதுகாப்பு அரண் அமைத்திருந்தது.
பொது மக்கள் பார்வையாளர்களாகக் கூட கலந்து கொள்ள விடாமல் தடுக்கப் பட்ட ஊர்வலம் அது தான். 500 மீட்டர் சுற்று வட்டாரத்தில் பலத்த பொலிஸ் காவல் போடப் பட்டிருந்தது. தெருவில் எந்த வாகனத்தையும் செல்ல விடவில்லை. பாதசாரிகளைக் கூட அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினார்கள்.
இது குறித்து பொலிசாரிடம் கேட போது, பின்வருமாறு தெரிவித்தனர். “வலதுசாரிகளும், இடதுசாரிகளும் எதிரெதிராக ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். அவர்கள் மோதிக் கொள்வதை தடுப்பதற்காக நாம் நடுவில் நிற்கிறோம்…” என்றனர். உண்மையில் பொலிஸ் “நடுவில்” நிற்கவில்லை. வலதுசாரிகளுக்கு பரிபூரண பாதுகாப்புக் கொடுத்தனர். பொது மக்களைக் கூட கிட்டவும் நெருங்க விடவில்லை.
அம்ஸ்டல் நதியோரம் உள்ள ஆம்ஸ்டர்டாம் நகர சபைக்கு அருகில் தான் வலதுசாரிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆனால், இடதுசாரிகளின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நதிக்கு மறு கரையில் நடந்து கொண்டிருந்தது. ஆகவே இரு குழுவினரையும் பிரித்தது ஒரு ஆறு, பொலிஸ் அல்ல! மேலும் இடதுசாரிகள் நின்ற பக்கத்தில் மக்கள் சுதந்திரமாக நடமாடினார்கள். வலதுசாரிகள் பக்கத்தில் ஒரு ஈ, காக்கா கூட பறக்கவில்லை!
வலதுசாரிகளின் ஊர்வலம் நகரத் தொடங்கியதும், பத்துப் பதினைந்து பேர் நெதர்லாந்து கொடிகளை அசைத்த படி சென்றனர். (தேசியவாதிகளாம்!) அவர்களுக்கு பின்னால் சென்ற வாகனத்தில் ஒரு சவப்பெட்டி வைக்கப் பட்டிருந்தது. அதில் டச்சுக் கொடியின் மூவர்ண பூச்சுக் காணப் பட்டது. வாகனத்தில் மரண வீட்டு கீதம் ஒலித்தது. (நெதர்லாந்து தேசியம் இறந்து விட்டது என்று உணர்த்துகிறார்களாம்!)
அம்ஸ்டல் நதிக்கரையோர பாதையால் Pegida ஊர்வலம் சென்று கொண்டிருந்த நேரம், எதிர்ப் புறமாக இருந்த பாலத்தில் பாசிச எதிர்ப்பாளர்கள் நின்று கொண்ருந்தார்கள். “Antifa” எனும் பாசிச எதிர்ப்பு இயக்கக் கொடியை பாலத்தில் கட்டி இருந்தனர். “நாஸிகள் ஒழிக!”, “இனவாதிகள் ஒழிக!” என்று கோஷமிட்டனர். இதை எல்லாம் கண்காணித்துக் கொண்டு, மேலே ஒரு பொலிஸ் ஹெலிகாப்டர் வட்டமடித்துக் கொண்டிருந்தது