விண்வெளியில் இருந்து பூமியை நோக்கி வந்த சீன ராக்கெட்..! இந்தியப் பெருங்கடலுக்கு மேல் வானிலேயே எரிந்தது..!
விண்வெளியில் இருந்து பூமியை நோக்கி வந்த சீன ராக்கெட் இன்று இந்தியப் பெருங்கடலுக்கு மேல் வானிலேயே எரிந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனா, ‘தியான்காங்’ என்ற விண்வெளி ஆய்வு நிலையத்தை விண்வெளியில் அமைத்து வருகிறது.இதற்காக சீனா,ஒரு மிகப்பெரிய விண்கலத்தை கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி “லாங் மார்ச் 5 பி” என்ற ராக்கெட் உடன் இணைத்து விண்ணிற்கு அனுப்பியது.
இந்நிலையில்,விண்வெளியின் சுற்றுப்பாதையில் சீன விண்கலத்தை நிறுத்திவிட்டு பூமிக்கு திரும்பும் வேளையில் “லாங் மார்ச் 5 பி” ராக்கெட் தனது கட்டுப்பாட்டினை இழந்து பூமியை நோக்கி அதிவேகமாக வந்தது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த சீனா,”விண்வெளியில் கட்டுப்பாட்டை இழந்து பூமியை நோக்கி வரும் “லாங் மார்ச் 5 பி” ராக்கெட் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும்போது முழுவதுமாக எரிந்து விடும்.அதனால்,பூமிக்கு எந்த வித பாதிப்பும் இருக்காது”,என்று தெரிவித்துள்ளது.
எனினும், 18 டன் எடையுள்ள ராக்கெட்டின் எரிந்த பாகங்கள் மக்கள் வாழும் பகுதியில் விழக்கூடும் என அச்சம் நிலவியது.
இந்நிலையில்,”லாங் மார்ச் 5 பி” ராக்கெட் இன்று காலை 10.24 மணிக்கு வளிமண்டலத்திற்குள் நுழையும்போது முழுவதுமாக எரிந்தது என்றும் ராக்கெட்டின் எறிந்த குப்பைகள் மாலத்தீவுக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலில் விழுந்து விட்டன என்றும் சீன விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து,விண்வெளி நிகழ்வுகளை கண்காணிக்கும் ‘ஸ்பேஸ் ட்ராக்’ என்ற அமெரிக்க ராணுவ தளம் ,”லாங் மார்ச் 5 பி” ராக்கெட் எரிந்ததை உறுதி செய்துள்ளது.