சீனாவின் வூஹான் நகரில் வசிக்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை..!
சீனாவின் வூஹான் நகரில் வசிக்கக்கூடிய அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சீனாவின் வூஹான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று ஆரம்பம் ஆனது. இதனையடுத்து உலக நாடுகளில் பரவியது. உலக நாடுகளில் கொரோனா வைரஸ் தற்போது கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. மேலும் இந்த வைரஸ் தொற்று பலவகைகளில் உருமாற்றம் அடைந்து பல்வேறு நாடுகளை பாதித்து வருகிறது.
சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் சீனாவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. சீனாவிலுள்ள ஜியாங்சு, செச்சுவான், லியானிங், ஹூனான், ஹூபெய் உள்ளிட்ட ஐந்து மாகாணங்களில் இந்த டெல்டா வகை கொரோனா வேகமாக பரவி வரும் காரணத்தால் அங்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.
தற்போது சீனாவின் தலைநகர் பெய்ஜிங் உட்பட முக்கியமான 13 நகரங்களில் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் தொடங்கிய இடமான வூஹான் நகரத்தில் மீண்டும் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த நகரத்தில் இருக்கும் மக்கள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது.