பிரிட்டன், அமெரிக்காவை தொடர்ந்து சீனாவில் கொரோனா தடுப்பு மருந்திற்கு அனுமதி!
சீனா, தனது முதல் கொரோனா தடுப்பூசிக்கான ஒப்புதலை சினோபார்ம் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.
உலகளவில் கொரோனா பரவல் அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா, இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகள் தீவிரமடைந்துள்ளது. இதில் பல தடுப்பூசிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி தற்பொழுது பிரிட்டனில் ஃபைசர் தடுப்பூசியும், அமெரிக்காவில் மார்டனா கொரோனா தடுப்பூசி அனுமதி வழங்கி, இங்கிலாந்து, ரஷ்யா, அமெரிக்காவில் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியுள்ளது.
அந்தவகையில், சீன அரசுக்கு சொந்தமான சினோபார்ம் நிறுவனம், கொரோனா தடுப்பூசியை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தது. சினோபார்ம் நிறுவனம், 2 பிரிவுகள் தனித்தனியாக 2 தடுப்பூசிகளை தயாரித்து வருகிறது. இதில் பெய்ஜிங்கில் தயாரிக்கப்பட்டு வந்த தடுப்பூசி, 86 சதவீதம் கொரோனாக்கு எதிராக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது சினோபார்ம் நிறுவனத்தின் உகான் நகரில் தயாரிக்கப்படும் மற்றொரு தடுப்பூசி இறுதிக்கட்ட பரிசோதனையை நிறைவு செய்துள்ளது. இதனால் இன்னும் சில நாட்களில் இந்த தடுப்பு மருந்திற்கு ஒப்புதல் வழங்கவுள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில் சீனா, தனது முதல் கொரோனா தடுப்பூசிக்கான ஒப்புதலை சினோபார்ம் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. இதனால் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வருமாறு கூறப்படுகிறது. அதன்படி, இந்த தடுப்பு மருந்து முதல்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு செலுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த தடுப்பூசியை அவசர தேவைக்கு பயன்படுத்தி ஐக்கிய அரபு அமீரகம் ஏற்கனவே ஒப்புதல் வழங்கியுள்ளது, குறிப்பிடத்தக்கது.