ஆளுநருக்கு புத்தகத்தை பரிசளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..! என்ன புத்தகம் தெரியுமா..?
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் ஆர்.என் ரவியுடன் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சந்தித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியுள்ள நிலையில், தற்போது ஆளுநரை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நேரில் சந்தித்துள்ளார்.
நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்டமுன்வடிவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு விரைந்து அனுப்பிட வேண்டும் என்று மாண்புமிகு தமிழக ஆளுநரை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.
மேலும், இதே போன்று பல மாதங்களாக நிலுவையில் இருக்கும் சட்டமுன்வடிவுகள் மற்றும் கோப்புகள் மீது உடனடி நடவடிக்கை எடுப்பதன் மூலம், தமிழ்நாடு சட்டமன்றத்தின் மாண்பைக் காப்பதுடன், தமிழக மக்களின் உணர்வுகளை மதிப்பதாகவும் அமைந்திடும் என தமிழக ஆளுநரிடம் தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் சுட்டிக்காட்டி வலியுறுத்தினார். மாண்புமிகு இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்களுக்கு அனுப்பி வைப்பதாக உறுதியளித்தார்.
இந்த நிலையில் இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘‘The Dravidian Model’ நூலை அன்போடு வழங்கி மாண்புமிகு ஆளுநரைச் சந்தித்தேன். நீட் விலக்கு சட்டமுன்வடிவு & நிலுவையில் உள்ள சட்டமுன்வடிவுகளுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க கோரினேன். நீட் விலக்குச் சட்டத்தைக் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்புவதாக ஆளுநர் உறுதியளித்துள்ளார்., என பதிவிட்டுள்ளார்.