என் ரசிகர்கள் மாஸ்டர் படம் பாருங்க! விஜய் அண்ணா ரசிகர்கள் ஈஸ்வரன் படம் பாருங்க – சிம்பு
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
என் ரசிகர்கள் மாஸ்டர் படம் பாருங்கள். விஜய் ரசிகர்கள் ஈஸ்வரன் பாருங்கள். திரையரங்கள் நிறையட்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நடிகர் சிம்பு அவர்கள் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘இனிய புத்தாண்டை தொடங்கியிருக்கும் சினிமா ரசிகர்களுக்கும், தமிழ் மக்களுக்கும் எனது அன்பும், வாழ்த்துக்களும்! ஈஸ்வரன் பொங்கல் தினத்தன்று வெளிவர இருக்கிறது. மிக முக்கியமாக இந்த படம் வெகு குறுகிய காலத்தில் தயாரானது திரையரங்குகளின் மீட்சிக்காக தான். திரையுலகமே முடங்கிவிட்டது. ஆன்லைன் வெளியீடுகள் ஓரளவு காப்பாற்றி வந்தாலும், திரையரங்குகள் திருவிழா கோலம் பூண வேண்டியது அவசியம்.
அதற்காகத்தான் இந்த கொரோனா காலத்திலும் பிரயத்தனப்பட்டு, உயிரை பணயம் வைத்து நடித்து முடித்து, தொழில்நுட்ப வேலைகள் டப்பிங் எல்லாம் செய்யப்பட்டது. சாதாரண முயற்சியல்ல. இதற்காக பிரயாசைப்பட்டு ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். அதேசமயம் அண்ணன் விஜய் அவர்கள் படம் முடித்து ஒரு வருடம் ஆகியும் திரையரங்கிற்கு மட்டுமே வர வேண்டும் என உறுதியாக இருந்தார். அது தன்னை உருவாக்கிய அந்த மீடியாவிற்கு செய்யும் மரியாதை.
அதில் எனது பங்கும் இருக்க வேண்டும் என்று விரும்பினேன். நாங்கள் திரையரங்குகளால் உருவானவர்கள். மக்கள் எங்களை திரையில் பார்த்து மகிழ்ந்து கொண்டாடுவதால் வளர்ந்தவர்கள். அவர் நினைத்திருந்தால் மாஸ்டரை ஆன்லைனில் வெளியிட்டு இருக்கலாம். ஆனால் திரையரங்குகளுக்கு மீண்டும் விடிவுகாலம் வர வேண்டும் என பொருத்திருந்து வெளியிடுகிறார். திருவிழா நாட்களில் எப்போதும் இரண்டு பெரிய படங்கள் வெளிவரும். கலவையான படங்கள் வரும்போது மக்கள் திரையரங்குக்கு பயமின்றி வரத் தொடங்குவார்கள்.
என் ரசிகர்கள் மாஸ்டர் படம் பாருங்கள். விஜய் ரசிகர்கள் ஈஸ்வரன் பாருங்கள். திரையரங்கள் நிறையட்டும். கொரோனா தாண்டி வாழ்க்கையோடு போராடி வெற்றி பெற்று நிற்கும் நாம், நமது மன அழுத்தத்தில் இருந்து வெளியேற வேண்டும். அதற்காக இந்த படங்கள் நிச்சயம் உதவும். உங்களை மகிழ்விக்கும். திரையரங்குகள் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் நல்லபடியாக மீண்டு வரவேண்டும்.
திரை உலகம் செழிக்க வேண்டும். அதற்கான வாசலை மாஸ்டரும், ஈஸ்வரனும் திறக்கும் என நம்புகிறேன். அரசாங்கம் கடைகள், மால்கள், கடற்கரை என எல்லாமே முழுமையாக திறக்கப்பட்டு விட்டன. திரையரங்குகள் முழுமையாக திறக்கப்பட்டு விட்டால் ஒழிய, அந்த பழைய நிலை வராது.
வசூல் நஷ்டமே ஏற்படும், அரசும் தயைகூர்ந்து 100% இருக்கைகளுக்கு அனுமதி தந்து பாதுகாப்பு விதிகளை அதிகரித்து திரையரங்க உரிமையாளர்களையும், சினிமா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும், காக்க நல்ல உத்தரவை வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். மாண்புமிகு தமிழக முதல்வர் புத்தாண்டிற்குள், 100% இருக்காய் ஆக்கிரமிப்பு குறித்து உத்தரவிட்டால், மிக்க நன்றியுள்ளவர்களாக இருப்போம்.’ என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.