சாதிவாரி கணக்கெடுப்பு : 40 பெண்களுக்கு ரூப்சந்த் என்ற ஒரே நபர்தான் கணவர்…! அதிர்ந்து போன அதிகாரிகள்..!
பீகாரில் ஜாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, 40 பெண்ளுக்கு ரூப்சந்த் என்ற நபரின் பெயரை கணவராக பதிவு செய்துள்ளனர்.
நிதீஷ் குமார் அரசு பீகாரில் ஜாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பை ஜனவரி 7-ஆம் தேதி தொடங்கியது. இந்தக் கணக்கெடுப்புத் திட்டத்திற்கு ரூ. 500 கோடி செலவாகும். இந்த பணிகளை மேற்கொள்ள 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மக்களின் கல்வி, பொருளாதாரம், பிற தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. மாநிலத்தில் உள்ள 12.7 கோடி மக்களின் தகவல்கள் இரண்டு கட்ட கணக்கெடுப்புகளின் மூலம் திரட்டப்பட்டு, மே மாதம் முடிவுகளை அறிவிக்க பீகார் அரசு திட்டமிட்டுள்ளது.
முதல் கட்டத்தில், அனைத்து வீடுகளின் எண்ணிக்கையும் கணக்கிடப்படுகிறது. இரண்டாவது கட்டத்தில், அனைத்து சாதிகள், உட்பிரிவுகள் மற்றும் மதங்களைச் சேர்ந்தவர்கள் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட உள்ளன.
இந்த நிலையில், பீகார் மாநிலம் அர்வால் மாவட்டத்தில் உள்ள சிவப்பு விளக்கு பகுதியில் சுமார் 40 பெண்கள் ரூப்சந்த் என்ற நபரை தங்கள் கணவராக அறிவித்தது ஜாதிவாரி கணக்கெடுப்பின் போது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், பெண்களின் குழந்தைகளின் சான்றிதழை பார்த்தபோது, 40 பெண்களும் தங்கள் குழந்தைகளின் தந்தையாக ரூப்சந்த் என்ற பெயரை பதிவு செய்திருந்தது தெரியவந்தது.
சிகப்பு விளக்கு பகுதியில் வசிக்கும் மக்கள், பாடியும், நடனமாடியும் வாழ்வாதாரம் நடத்தி வருவதாகவும், நிரந்தர முகவரி இல்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆன்னால், ரூப்சந்த் யார், எங்கு இருக்கிறார் என்பது யாருக்கும் தெரியாது.