கார்லோஸ் , கிறிஸ் கெய்ல் அதிரடி வீணானது! 5 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி !
நேற்றைய போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், நியூசிலாந்து அணியும் மோதியது.இப்போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச முடிவு செய்தது.
இதன் பின் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் குப்தில் மற்றும் முன்ரோ டக் அவுட்டாகி வெளியேறினார்கள்.பின்னர் வில்லியம்சன் மற்றும் டெய்லர் ஜோடி சிறப்பாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டது.
ஆனால் டெய்லர் 69 ரன்களில் வெளியேறினார்.வில்லியம்சன் அபாரமாக விளையாடி சதம் அடித்தார்.அவரும் 148 ரன்களில் வெளியேறினார்.பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இறுதியாக நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 291 ரன்கள் அடித்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சில் கோட்ரல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் 292 ரன்கள் இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்களாக கிறிஸ் கெய்ல் , ஷாய் ஹோப் இருவரும் களமிறங்கினர்.ஆட்டத்தின் தொடக்கத்திலேயே ஷாய் ஹோப் 1 ரன்னில் அவுட் ஆனார்.
பின்னர் களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் ஒரு ரன்னில் வெளியேறினார். அடுத்ததாக ஷிம்ரான் ஹெட்மியர் களமிறங்க கிறிஸ் கெய்ல் , ஷிம்ரான் ஹெட்மியர் இருவரும் அதிரடியாக விளையாடி அணியின் ரன்களை குவித்தனர்.
அதிரடியாக விளையாடிய இருவருமே அரைசதத்தை நிறைவு செய்தனர். இந்நிலையில் அரைசதம் அடித்த சிறிது நேரத்திலே ஷிம்ரான் ஹெட்மியர் 54 ரன்னில் வெளியேறினர். அடுத்ததாக கேப்டன் ஜேசன் ஹோல்டர் ரன்கள் அடுக்காமல் அவுட் ஆனார்.
மத்தியில் களமிறங்கிய கார்லோஸ் பிராத்வைட் 101 , கிறிஸ் கெய்ல் 87 ,ஷெல்டன் கோட்ரெல் 15 ,கெமர் ரோச் 14 ,ஆஷ்லே நர்ஸ் 1 ரன்னிலும் வெளியேறினார். இறுதியாக வெஸ்ட் இண்டீஸ் 49 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 286 ரன்கள் எடுத்து 5 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.