கனடா தேர்தல் – 3வது முறையாக வரலாற்று வெற்றியை பதிவு செய்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.!
கனடா தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி 3வது முறையாக வெற்றி பெற்றுள்ளது.
கனடா தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி 3வது முறையாக வெற்றி பெற்றுள்ளது. ஆனால், மெஜாரிட்டிக்கு தேவையான இடங்களை விட குறைவான இடங்களில் முன்னிலை வகித்து உள்ளது. கனடாவை ஆளும் லிபரல் கட்சி 156 இடங்களில் வெற்றி மற்றும் முன்னிலையில் உள்ளது. எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சி 121 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
கனடாவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை பொதுத்தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். கடந்த 2019ல் நடைபெற்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனால், ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த நிலையில் தான் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டின் பிரதமராக தொடர்ந்தார்.
ஆனால், பெரும்பான்மை இல்லாமல் ஆட்சியை நடத்துவது ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கடினமாக இருந்தது. இதன் காரணமாக கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி அந்நாட்டின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, நேற்று பொது தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி சார்பில் ஜஸ்டின் ட்ரூடோ, கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் எரின் ஓ டூல் களமிறங்கினர்.
இந்த நிலையில், கனடா பொதுதேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின. கனடாவை ஆளும் லிபரல் கட்சி 156 இடங்களில் முன்னிலை பெற்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மூன்றாவது முறையாக வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளார். கனடாவில் பெரும்பான்மை பெற 170 இடங்களில் வெற்றி பெற வேண்டும். ஆனால், மீண்டும் பெரும்பான்மையை பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்காமல் போனது.