கொரோனா சிகிச்சைக்காக இந்தியாவிற்கு இரண்டாம் முறையாக நிவாரண பொருட்கள் அனுப்பிய கனடா!
கொரோனாவின் இரண்டாம் அலையின் தீவிரத்தை கட்டுப்படுத்த ஏற்கனவே கனடாவிலிருந்து நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்ட நிலையில், மீண்டும் கனடாவில் இருந்து இந்தியாவிற்கு மருத்துவ உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. குறிப்பாக இந்தியா பிற நாடுகளை விட அதிக அளவில் தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று தான் கூறியாக வேண்டும். இந்தியாவின் இந்த நெருக்கடியான காலகட்டத்தில் வெளிநாடுகளிலிருந்து ஆக்சிஜன் சிலிண்டர்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள், டெம்ரெசிவார் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் என நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட நாடுகள் இந்தியாவிற்கு தற்போது மருத்துவ உபகரணங்கள் வழங்கி உதவி செய்ய முன்வந்துள்ளது.
அந்த வகையில் ஏற்கனவே கனடா அரசு சார்பில் ஆக்சிஜன்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள், மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் ஆகியவை அனுப்பப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் கனடா அரசு சார்பில் இரண்டாம் முறையாக இந்தியாவிற்கு தேவையான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசியுள்ள சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் கரினா கோல்டு அவர்கள், இந்தியாவிற்கு 300 வென்டிலேட்டர் மற்றும் பல்வேறு தொழில்நுட்ப உபகரணங்கள் அனுப்பப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு தேவைப்பட்டால் ஆதரவளிக்க கனடா எப்பொழுதும் தயாராக உள்ளது என தெரிவித்துள்ளார்.