கல்வான் பள்ளத்தாக்கு தாக்குதல் – 4 சீன வீரர்கள் உயிரிழந்ததை ஒப்புக்கொண்ட சீனா!
கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஆண்டு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நடைபெற்ற தாக்குதலில் 4 சீன வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தற்பொழுது சீன அரசு ஒப்புக்கொண்டுள்ளது.
கடந்த ஆண்டு இந்தியா மற்றும் சீனாவின் எல்லைப்பகுதியான கல்வன் பள்ளத்தாக்கில் சீன ராணுவம் தனது படைகளை குவித்து எல்லையில் ஆக்கிரமிப்பு செய்து வருவதாக இந்திய குற்றம்சாட்டி இருந்தது. ஆனால் சீனா இதை தொடர்ந்து மறுத்து வந்த நிலையில், இந்திய ராணுவம் தனது படைகளை எல்லைப் பகுதிக்கு அனுப்பிய போது இந்திய இராணுவத்தினரிடம் சீன படைகள் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. சீன ராணுவத்தின் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த இந்திய ராணுவத்தினர் 20 பேர் வீரமரணம் அடைந்தனர்.
இதில் சீனாவை சேர்ந்த வீரர்களும் 43 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் சீனா இதைத் தொடர்ந்து மறுத்து வந்த நிலையில், தற்போது இந்த கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற தாக்குதலில் தங்களது வீரர்கள் 4 பேர் உயிரிழந்துள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளது. மேலும் அந்த வீரர்களின் பெயர்களையும் வெளியிட்டுள்ளது. இந்த தாக்குதலில் சென் ஹாங்ஜுன், சென் சியாங்ராங், சியாவோ சியுவான் மற்றும் வாங் ஜுயோரன் ஆகிய 4 வீரர்கள் தான் உயிரிழந்தனர் என கூறப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த ராணுவத்தினர் 4 பேருக்கும் சீனா விருது அறிவித்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.