எச்சரிக்கை…”2050 ஆம் ஆண்டுக்குள் 500 கோடி மக்களுக்கு தண்ணீ்ர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்” – ஐ.நா..!

Default Image

2050-ம் ஆண்டுக்குள் உலகளவில் 500 கோடி மக்கள் தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்வார்கள் என்று ஐ.நா. எச்சரித்துள்ளது.

உலகளாவிய நீர் நெருக்கடியை எதிர்கொண்டு வரும் நிலையில்,தற்போது நடப்பு ஆண்டுக்கான நீர் மேலாண்மை,காலநிலை சேவைகள் என்ற தலைப்பில் ஆய்வு செய்து உலக வானிலை அமைப்பு (டபிள்யுஎம்ஓ) அறிக்கை வெளியி்ட்டுள்ளது.அந்த அறிக்கையில்,மேம்பட்ட நீர் மேலாண்மை, கண்காணிப்பு மற்றும் முன்னறிவிப்பு தேவை என்று ஐநா உலக வானிலை அமைப்பு (WMO) எச்சரித்துள்ளது.

மேலும்,இது தொடர்பாக உலக வானிலை அமைப்பு பொதுச்செயலாளர் பேராசிரியர் பெட்டெரி தலாக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

உலகளவில் காலநிலை மாற்றத்தால் வெள்ளம், வறட்சி மற்றும் நீர் தொடர்பான பிற ஆபத்துகள் எதிர்காலத்தில் அதிகரிக்கும்.அதே நேரத்தில் மக்கள்தொகை வளர்ச்சி மற்றும் கிடைக்கப்பெறும் குறைவான தண்ணீர் அளவின் மத்தியில் “நீர் அழுத்தத்தை” அனுபவிக்கும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அந்த வகையில்,2018-ம் ஆண்டில் 360 கோடி மக்கள் ஆண்டுக்கு ஒரு மாதம் தண்ணீர் பற்றாக்குறையைச் சந்தித்த நிலையில், 2050-ம் ஆண்டுக்குள் 500 கோடி மக்கள் தண்ணீர் பற்றாக்குறை சிக்கலை எதிர்கொள்வார்கள்.

அதிகரித்து வரும் வெப்பநிலை உலகளாவிய மற்றும் பருவ மழை மாற்றங்களுக்கு வழிவகுக்கிறது,இவை,விவசாய பருவங்களில் மாற்றங்களுக்கு வழிவகுக்கிறது.இதன்மூலம்உணவு பாதுகாப்பு மற்றும் மனித ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.மேலும்,கடந்த 20 வருடங்களாக,ஆண்டுக்கு ஒரு செ.மீ வீதம், மண்ணில் ஈரப்பதம் குறைதல், பனி உறைதல், நிலப்பரப்பில் நீர் குறைதல் போன்றவை ஏற்படுகின்றன.

இந்த பாதிப்பு அண்டார்டிகா மற்றும் கிரீன்லாந்தில் பெரிய அளவில் ஏற்படுகிறது.இதனால்,இழப்பும் அதிகமாக உள்ளது.குறிப்பாக,அதிக மக்கள் தொகை கொண்ட தாழ்வான பகுதிகளில் வசிப்போர் தங்கள் பகுதிகளில் மிகப்பெரிய தண்ணீர் இழப்பை எதிர்கொண்டிருக்கிறார்கள்.இந்தப் பகுதிகளில் பாரம்பரியமாக நல்ல தண்ணீர் கிடைத்த நிலையில் தற்போது தட்டுப்பாடு நிலவுகிறது.

தண்ணீர் தொடர்பான பேரழிவுகள் 2000 ஆம் ஆண்டிலிருந்து அதிர்வெண்ணில் அதிகரித்துள்ளது.இதனால்,பெருவெள்ளம் தொடர்பான பேரழிவுகள் 134 சதவீதம் அதிகரித்துள்ளன. பெரும்பாலான பொருளாதார ரீதியான மற்றும் மனித உயிரிழப்புகள் ஆசியாவிலேயே நடந்துள்ளன.
அதேசமயம், வறட்சி, பஞ்சம் போன்றவை இதே காலகட்டத்தில் 29 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆப்பிரிக்காவில் வறட்சி,பஞ்சம் தொடர்பான சிக்கல்கள், பிரச்சினைகள் அதிகரித்துள்ளன. இந்த இரு கண்டங்களுக்கும் வலிமையான எச்சரிக்கை முறைகளை நிறுவுவது அவசியம்.

மேலும்,உலகளவில் தண்ணீர் பாதுகாப்பு, சேமிப்பு மோசமான நிலையில் இருக்கிறது. உண்மையக் கூறுவதென்றால், பூமியில் உள்ள தண்ணீரில் 0.5 சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்படாமலும், சுத்தமான நீராகவும் இருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளாக தண்ணீரை அசுத்தப்படுத்துவது, அதானால் ஏற்படும் ஆபத்து அதிகரித்து வருகிறது.

எனவே,கூட்டுறவு நீர் மேலாண்மை மற்றும் காலநிலை மாற்றக் கொள்கைகளைக் கடைபிடித்தல் மற்றும் பேரிடர் அபாயக் குறைப்பு ஆகியவை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும்”,என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்