அலுவலகத்திற்கு சத்தான மதிய உணவு எடுத்துச் செல்ல வேண்டியது அவசியமா?
அலுவலகத்திற்கு செல்லும் நபர்கள் காலில் சக்கரத்தைக் கட்டிக் கொன்டு சுற்றுவர்; இவர்களின் அவசரத்தைக் காணும் பொழுது, விரைந்து ஓடிக்கொண்டிருக்கும் இந்த நாகரீக உலகத்தின் வேகம் கூட குறைவோ என்ற எண்ணம் நிச்சயம் ஏற்படும். இவ்வாறு விரைந்து தயாராகி அலுவலகம் சென்று, அங்கு பரபரப்பாக பணி ஆற்றும் நபர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய பதிப்பு இது.
பணிக்கு செல்லும் நபர்கள், நேரத்திற்கு அலுவலகம் செல்ல வேண்டும் என்ற அவசரத்தில் மதிய உணவை வீட்டில் இருந்து உடன் எடுத்துச் செல்லாமல் சென்று விடுவர். பசித்தால் வெளியில் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்ற அசட்டு அலட்சிய எண்ணம் வேறு. இந்த பதிப்பில் பணி புரியும் நபர்கள் அலுவலகத்திற்கு சத்தான மதிய உணவு எடுத்துச் செல்ல வேண்டியது அவசியமா என்று பார்க்கலாம்.
தேவையான சக்தி
ஒவ்வொரு நாளும் நாம் இயங்க தேவையான சக்தியை உணவின் மூலமாக தான் பெறுகிறோம். அலுவலகத்தில் பசியில்லாமல் நன்கு பணியாற்ற, நல்ல சத்தான உணவை சாப்பிட்டு இருக்க வேண்டியது அவசியம்.
கடையில் கிடைக்கும் உணவுகளில் சத்துக்களை எதிர்பார்க்க முடியாது; ஆகையால் அலுவலகத்திற்கு செல்லும் பொழுது சத்தான உணவுகளை உடன் எடுத்துச் செல்லுங்கள், சத்தான உணவை உட்கொண்டு பணியாற்ற தேவையான சக்தியை பெறுங்கள்!
நேரம் மற்றும் பணம்
வீட்டில் சமைத்த ஆரோக்கிய உணவுகளை எடுத்துச் சென்று விடுவதால், வீணாக பணம் விரயம் செய்யப்படுவது தடுக்கப்படுகிறது மற்றும் அலுவலக நேரம் வீணாவதும் தடுக்கப்படுகிறது.
சரியான அளவு
வீட்டில் இருந்து நமக்கு தேவையான அளவு உணவு எடுத்துச் செல்லப்படுவதால், சரியான அளவு உணவினை உண்டு நலமுடன் வாழ்வோம். இதுவே கடைகளில் கிடைக்கும் உணவுகளை உண்ணுகையில், ஆரோக்கிய சீர்கேடு ஏற்படும் அபாயம் மற்றும் பார்க்கும் உணவுகளின் மீது இச்சை ஏற்பட்டு அளவுக்கு அதிகமான உணவுகளை உண்டுவிடும் அபாயம் உண்டு.
ஆகவே, இந்த பழக்கவழக்கத்தை முடிந்த வரை தவிர்த்து, வீட்டில் இருந்து சத்தான உணவுகளை எடுத்துச் சென்று உண்ண முயலுங்கள்.
நொறுக்குத்தீனிகள்
இடையில் பசி ஏற்பட்டால், அதற்கு கண்ட கண்ட நொறுக்குத்தீனிகளை உண்ணும் பழக்கம் தவிர்த்து, வீட்டில் இருந்தே சத்தான நொறுக்குத்தீனிகளை தயாரித்து எடுத்துச் செல்லுங்கள். இது இடையில் ஏற்படும் பசியை, போக்க உதவும்.