#BREAKING: உச்சக்கட்டத்தில் போர் – கதிர்வீச்சு அளவு அதிகரிப்பு.. உக்ரைன் தலைநகரை நெருங்கும் ரஷ்யா!
செர்னோபில் அணுமின் நிலைய தளத்தில் இருந்து கதிர் வீச்சு அளவும் அதிகரித்துள்ளது என்று உக்ரைன் அணுசக்தி நிறுவனம் எச்சரிக்கை.
உக்ரைனில் நேற்று அதிகாலை முதல் இன்று அதாவது தற்போது வரை தொடர்ந்து வான்வெளி மற்றும் நேரடி ராணுவ படைகள் மூலம் ரஷ்யா தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் உக்ரைன் மற்றும் ரஷ்ய ராணுவ வீரர்கள் ஏராளமானோர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தலைநகர் கீவில் இடைவிடாது ஏவுகணை தாக்குதல்கள் நடப்பதாகவும், பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
உக்ரைன் மீது இடைவிடாது தாக்குதல் நடத்தி வருவதால் உயிர் பிழைப்பதற்காக உக்ரைன் மக்கள் அங்குமிங்கும் அலை மோதுகின்றனர். 2வது நாளாக தொடரும் இந்த தாக்குதலில் இதுவரை 137 வீரர்கள் பலியாகி உள்ளனர். மேலும் இன்று கீவ் நகரில் ஏவுகணை தாக்குதலில் ரஷ்யா ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ் -இல் இருந்து ரஷ்ய ராணுவம் 3 மைல் தொலைவில் இருப்பதாக கூறப்படுகிறது.
கீவ்வில் அரசு அதிகாரிகளின் குடியிருப்பு அருகே ரஷ்ய ராணுவம் துப்பாக்கிசூடு நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, செர்னோபில் அணுமின் நிலைய தளத்தில் இருந்து கதிர் வீச்சு அளவும் அதிகரித்துள்ளது என்று உக்ரைன் அணுசக்தி நிறுவனம் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. செர்னோபில் பகுதியை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியுள்ள நிலையில், அணுசக்தி நிறுவனம் தகவல் கூறியுள்ளது.
ஒருபுறம் செர்னோபில் அணுமின் நிலைய தளத்தில் இருந்து கதிர் வீச்சு அளவு அதிகரிப்பு பெரும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், விரைவில் உக்ரைன் தலைநகர் கீவ்வை ரஷ்ய கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் உக்ரைன் – ரஷ்யா இடையே போர் உச்சக்கட்டத்தில் உள்ளது. உக்ரைனில் உள்ள ராணுவ தளங்கள், விமான தளங்கள் அழிக்கப்பட்டு, பல்வேறு பகுதிகளை ரஷ்ய ராணுவம் கைப்பற்றி வருகிறது. இந்த சூழலில், அணுமின் நிலையத்தில் இருந்து கதிர்வீச்சு அளவு அதிகரித்துள்ளது என்பது பெரும் அபாயகரமானது என்று கூறப்படுகிறது.