#BREAKING: உக்ரைனின் இரண்டு முக்கிய நகரங்களை கைப்பற்றியதாக ரஷ்யா அறிவிப்பு!
உக்ரைனின் தெற்கு மற்றும் தென் கிழக்கு பகுதியில் உள்ள இரண்டு முக்கிய நகரங்களை கைப்பற்றிய ரஷ்யா.
உக்ரைன் மீது தொடர்ந்து நான்காவது நாளாக இன்றும் ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைனின் தெற்கு மற்றும் தென் கிழக்கு பகுதியில் உள்ள இரண்டு முக்கிய நகரங்களை கைப்பற்றியதாக ரஷ்யா அறிவித்துள்ளது. ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் மறுப்பு தெரிவித்ததாக தகவல் வெளியானதை தொடர்ந்து, உக்ரைன் மீது முழு ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள அந்நாட்டு அதிபர் புதின் நேற்று உத்தரவிட்டார்.
இதனைத்தொடர்ந்து, ரஷ்யா ராணுவ படை உக்ரைனை சுற்றிவளைத்து கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது. பெரிய பலத்தை கொண்டுள்ள ரஷ்ய படைக்கள் தாக்குதலுக்கு, உக்ரைன் ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் பகுதிக்குள் ரஷ்ய துருப்புக்கள் மற்றும் ராணுவ வாகனங்கள் நுழைந்து, அந்நகரத்தையும் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே, உக்ரைன் தலைநகரான கீவ் மீது தாக்குதல் நடத்தி வந்த நிலையில், தற்போது இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் பகுதியை ரஷ்ய படைகள் கைப்பற்றியுள்ளது. இதன்மூலம் உக்ரைனை முழுவதும் ரஷ்ய படைகள் சுற்றிவளைத்து தாக்குதலை நடத்தி, பல்வேறு பகுதிகளை கைப்பற்றி வருகிறது. இனி உக்ரைன் தலைநகர் கீவ்-வை பிடித்துவிட்டால் உக்ரைன் நாடு முழுவதையும் ரஷ்யா கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், உக்ரைன் ராணுவம், ரஷ்ய படைகளை எதிர்த்து முடிந்தவரை போராடி வருகிறது. இதனால் போர் உச்சக்கட்டத்தில் நடந்து வருகிறது. எந்நேரத்திலும் எதுவேண்டுமானாலும் நடக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ரஷ்யாவை எதிர்த்து போராட உக்ரைனுக்கு நேட்டோ கூட்டமைப்பில் உள்ள நாடுகள் என பல நாடுகளும் ராணுவ நிதி உதவி மற்றும் ஆயுதங்களை அனுப்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.