#Breaking:ரேசன் கடைகளில் தரமான பொருட்கள் – தமிழக அரசு அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் உள்ள ரேசன் கடைகளில் தரமற்ற பொருட்கள் வழங்கப்படுவதாக புகார் எழுந்த நிலையில்,நல்ல தரமான ரேசன் பொருட்கள் மட்டுமே நியாய விலைக் கடைகளில் வழங்கப்படுகின்றனவா? என்பதை உறுதி செய்ய அனைத்து மாவட்டங்களிலும் கண்காணிப்பு குழுக்களை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி,மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுவில் மாவட்ட வழங்கல் அலுவலர்(கன்வீனர்), முதுநிலை மண்டல மேலாளர் (தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன்),கூட்டுறவு இணைப் பதிவாளர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் (சிவில் சப்ளைஸ் சிஐடி) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
குறிப்பாக,ரேசன் அட்டைதாரர்களுக்கு அனைத்து பொருட்களும் உரிய நேரத்தில் வழங்கப்படுகின்றனவா என்பதையும்,எந்தவொரு காரணத்திற்காகவும் ரேசன் பொருட்களின் திருட்டை அனுமதிக்கக்கூடாது எனவும் கண்காணிப்பு குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும்,இக்குழு ஒவ்வொரு மாதமும் 1-வது மற்றும் 3-வது திங்கட்கிழமைகளில் கூடும். கூட்டத்தின் நிமிடங்கள் சிவில் சப்ளைஸ் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையருக்கு தவறாமல் அனுப்பப்படும்,அவர் ஆய்வு செய்து ஒருங்கிணைக்கப்பட்ட மாதாந்திர அறிக்கையை அரசுக்கு அனுப்புவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.