#BREAKING : நம்பிக்கை இல்லா தீர்மானம் – உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக பாக். அரசு மேல்முறையீடு…!
பாநாயகரின் நடவடிக்கை செல்லாது என்றும் உத்தரவிட்ட பாக்.உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக பாகிஸ்தான் அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
பாகிஸ்தானில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கத்துக்கு பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசே காரணம் என அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதன் காரணமாக எதிர்கட்சிகள், பிரதமர் இம்ரான்கான் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முனைப்பு காட்டி வந்தனர்.
நம்பிக்கையில்லா தீர்மானம்
இந்த நிலையில், கடந்த 3-ஆம் தேதி பிரதமர் இம்ரான் கான் அரசின் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்த, பாகிஸ்தான் தேசிய சட்டசபையின் நடவடிக்கைகள் நடைபெற்ற நிலையில், பிரதமர் இம்ரான் கான் சட்டசபைக்கு வரவில்லை. இதனால், பாகிஸ்தானில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெறாது என நாடாளுமன்ற துணை சபாநாயகர் காசிம்கான் அறிவித்திருந்தார்.
நாடாளுமன்றம் கலைப்பு
இதற்கிடையில், நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தல் நடத்த வேண்டும் என அதிபருக்கு பிரதமர் இம்ரான்கான் பரிந்துரை செய்தார். இந்நிலையில், பிரதமர் இம்ரான் கானின் பரிந்துரையை ஏற்று அதிபர் ஆரிப் ஆல்வி நாடாளுமன்றத்தைக் கலைத்தார். பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு 3 மாதத்துக்குள் தேர்தல் நடத்த அதிபர் உத்தரவு பிறப்பித்து இருந்தார்.
நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது
பாகிஸ்தான் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது அரசியலமைப்புக்கு எதிரானது என்று கூறி எதிர்க்கட்சிகள் அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது என தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், நாடாளுமன்றத்தை கலைக்க அதிபருக்கு பிரதமர் அறிவுறுத்த முடியாது என்றும், பாகிஸ்தான் துணை சபாநாயகரின் உத்தரவு அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
நாடாளுமன்றம் ஒத்திவைப்பு
இம்ரான் கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்த நாடாளுமன்றம் கூடியது. இம்ரான் கான் மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்த ஒரு உறுப்பினர்கள் கூட நாடாளுமன்றத்திற்கு வரவில்லை. இந்நிலையில், சபாநாயகர் நாடாளுமன்றத்தை பகல் 1 மணி வரை ஒத்துவைத்தார்.
மேலும், நம்பிக்கை வாக்கெடுப்பு அடுத்த வாரத்திற்கு தள்ளி போகலாம் என்று பாக். சட்டத்துறை அமைச்சர் ஃபவத் சவுத்ரி தகவல் தெரிவித்ததாக தகவல் வெளியான நிலையில், நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் 8 மணிக்கு மேல் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு
இந்நிலையில், நம்பிக்கையில்லா தீர்மானம் செல்லாது என்றும், சபாநாயகரின் நடவடிக்கை செல்லாது என்றும் உத்தரவிட்ட பாக்.உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக பாகிஸ்தான் அரசு மேல்முறையீடு செய்துள்ளது.