#Breaking:இந்திய கோதுமைக்கு 4 மாதங்கள் தடை – ஐக்கிய அரபு அமீரகம் !
உக்ரைன் மற்றும் ரஷ்யா போர் காரணமாக அந்நாடுகளில் இருந்து கோதுமை ஏற்றுமதி தடைபட்டுள்ளதால் உலக அளவில் கோதுமை தட்டுப்பாடு நிலவி வருகிறது.இதன்காரணமாக,எகிப்து உள்ளிட்ட பல நாடுகள் இந்தியாவிலிருந்து கோதுமை இறக்குமதி செய்ய திட்டமிட்டிருந்த நிலையில்,உள்நாட்டில் தொடர் விலையேற்றத்தை தவிர்க்க கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்து மத்திய அரசு அண்மையில் உத்தரவிட்டது.
இந்நிலையில்,இந்தியாவில் இருந்து வரும் கோதுமையை மறு ஏற்றுமதி செய்வதற்கு ஐக்கிய அரபு அமீரகம் தற்காலிக தடை விதித்துள்ளது. மேலும், இந்தியாவில் இருந்து வரும் கோதுமை,கோதுமை மாவின் ஏற்றுமதிக்கும் அடுத்த 4 மாதங்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதார அமைச்சகம் தடை விதித்துள்ளது.
சர்வதேச நிலவரங்களால் ஏற்பட்டுள்ள வர்த்தக சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இந்திய கோதுமைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.மேலும்,கோதுமை ஏற்றுமதி,மறு ஏற்றுமதி செய்ய விரும்புபவர்கள் முதலில் ஐக்கிய அரபு அமீரகத்தின் சம்மந்தப்பட்ட அமைச்சகத்திடம் தங்களது ஆவணங்களை சமர்பிக்க வேண்டும் எனவும்,அதன்பின்னர் இது தொடர்பான முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் அமீரக அரசு தெரிவித்துள்ளது.