#BREAKING: ரஷ்யாவுக்கு பொருளாதார தடை விதிப்பதற்கு சீனா எதிர்ப்பு!
ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் தொடர்ச்சியாக பொருளாதார தடை விதித்து வரும் நிலையில், அதற்கு சீனா எதிர்ப்பு.
ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் தொடர்ச்சியாக பொருளாதார தடை விதித்து வரும் நிலையில், அதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ரஷ்யா மீது அறிவிக்கப்படும் பொருளாதார தடை ஒருதலைப்பட்சமானது என கூறி சீனா வெளியுறவுத்துறை அமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில், அதன் மீது பல்வேறு பொருளாதார தடைகளை அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் விதித்துள்ளன.
குறிப்பாக நேட்டோ கூட்டமைப்பில் உள்ள நாடுகள் ரஷ்யா மீது தடைகளை விதித்து வருகிறது. அதாவது ஐரோப்பிய ஒன்றியம் இதுவரை ரஷ்யாவில் உள்ள 27 தனிநபர் வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் மீது பல்வேறு விதமான தடைகளை விதித்திருக்கின்றன. இதனால் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உட்பட்ட வங்கிகளில் அவர்கள் பரிவர்த்தனை செய்யவோ, நிதி உதவி பெறவோ முடியாது என்ற சூழல் உருவாகியுள்ளது.
இந்த நிலையில், ரஷ்யா மீது தொடர்ந்து அறிவிக்கப்படும் தடைகளுக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆரம்பத்தில் இருந்து ரஷ்யாவிற்கு நட்பு நாடாக விளங்கி வரும் சீனா, ரஷ்யா மீது இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு கண்டனத்தை தெரிவித்துள்ளது சீனா. முன்னதாக உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், சீனா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவிற்கு ஆதரவு அளித்திருந்தது என்பது குறிபிடத்தக்கது.