#BREAKING: ஒரே இரவில் ஆப்கானிஸ்தானில் உள்ள முக்கிய விமான நிலையத்தை தாக்கிய 3 ராக்கெட்கள்.!

Default Image

ஆப்கானிஸ்தானில் உள்ள கந்தஹார் விமான நிலையத்தை 3 ராக்கெட்டுகள் தாக்கியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தெற்கு ஆப்கானிஸ்தானின் கந்தஹார் விமான நிலையத்தில் மூன்று ராக்கெட்டுகள் தாக்கியதாகவும், இதனால் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதாகவும், விமான நிலைய தலைவர் மசூத் பஷ்டூன் தெரிவித்துள்ளார். அதாவது, நேற்று இரவு விமான நிலையத்தில் மூன்று ராக்கெட்டுகள் வீசப்பட்டதாகவும், அவற்றில் 2 ராக்கெட்டுகள் ரன்வேயை தாக்கியுள்ளது என்றும் கூறியுள்ளார்.

இதன் காரணமாக, விமான நிலையத்தில் இருந்து அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. விமான நிலையத்தின் ஓடு பாதையை சரிசெய்யும் பணி நடந்து வருவதாகவும், விமான நிலையம் இன்று பிற்பகுதியில் செயல்பட வாய்ப்பு இருப்பதாகவும் பஷ்டூன் கூறினார். இந்த ஏவுகணை தாக்குதலில் இதுவரை எந்த உயிர் சேதம் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் இரண்டாவது பெரிய நகரத்தை தீவிரவாதிகள் கைப்பற்றுவதைத் தடுக்க தேவையான தளவாடங்கள் மற்றும் விமான ஆதரவை வழங்க கந்தஹாரின் விமான தளம் முக்கியமானது என கருதப்படுகிறது. கடந்த இரு தினம் முன்பு, ஆப்கானிஸ்தானில் ஹெராட் நகரில் அமைந்துள்ள ஐ.நா.வளாகத்தின் முக்கிய பகுதி மீது பயங்கரவாதிகள் சிலர் தாக்குதல் நடத்தினர்.

இந்த சம்பவத்தில் ஆப்கானிஸ்தானின் பாதுகாவலர் ஒருவர் கொல்லப்பட்டார். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு ஐ.நா.பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்ரெஸ் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிபர் அஷ்ரப் கனி தலைமையிலான ஆளும் அரசுக்கு எதிரான தாக்குதலில் தலீபான் பயங்கரவாதிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சூழலில் ஆப்கானிஸ்தானில் அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த அமெரிக்க படைகள், அதிபர் ஜோ பைடனின் உத்தரவுப்படி வாபஸ் பெறப்பட்டு வருகின்றன.  இதனை பயன்படுத்தி கடந்த சில வாரங்களாக, தலிபான்கள் ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு மாகாணமான தாகர் உட்பட பல மாவட்டங்களைக் கைப்பற்றியுள்ளனர். ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின்படி, தலிபான்கள் 193 மாவட்ட மையங்களையும், 19 எல்லை மாவட்டங்களையும் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.

இதுபோன்று, கடந்த மாதம், ஈத் தொழுகையின் போது ஜனாதிபதி மாளிகைக்கு அருகிலுள்ள பகுதிகளில் மூன்று ராக்கெட்டுகள் தரையிறக்கப்பட்டன. தற்போது முக்கிய விமான நிலையத்தை 3 ராக்கெட்டுகள் தாக்கியுள்ளது. ஆப்கானிஸ்தானில் கனமழை, வெள்ளப்பெருக்கு, பயங்கரவாதிகள் தாக்குதல், கொரோனா பாதிப்புகள் என அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் சூழலில் இந்த தாக்குதல் நடந்து உள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்