இங்கிலாந்தில் பரவும் புதிய வகை கொரோனா ! போரிஸ் ஜான்சன் இந்தியப் பயணம் ரத்து ?
இங்கிலாந்தில் புதிய வகையான கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் , அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் குடியரசு தின விழாவில் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இங்கிலாந்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், லண்டனில் கொரோனா பரவல் தற்பொழுது அதிகரித்துக் கொண்டே வருகிறது.அதாவது ,புதிய வகையான கொரோனா வைரஸ் எனவும், இது இங்கிலாந்தின் தெற்குப் பகுதியில் இந்த வகையான கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருகிறதாகவும் அந்நாட்டின் சுகாதார செயலாளர் மாட் ஹான்ஹாக் கூறினார். இதன்காரணமாக அந்நாட்டில் மூன்றடுக்கு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.ஏற்கனவே நேற்று முதல் டிசம்பர் 31-ஆம் தேதி இரவு 11.59 மணி வரை பிரிட்டன் விமானங்கள் இந்தியா வருவதற்கு தடை விதிக்கப்படுவதாக விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்தது.
இதனிடையே அடுத்த ஆண்டு, ஜனவரி 26-ஆம் தேதி இந்தியாவில் குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதனை அடுத்து, தலைநகர் டெல்லியில் பிரம்மாண்டமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.எனவே பிரதமர் நரேந்திர மோடி, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனை அடுத்த ஆண்டு, டெல்லியில் நடைபெறவுள்ள குடியரசு தின விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்க வரும்படி அழைப்பு விடுத்தார். இதனையடுத்து, பிரதமர் மோடியின் அழைப்பை இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏற்றுக்கொண்டார்.இதனை உறுதிப்படுத்தும் விதமாக இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் வெளியிட்ட தகவலில் ,இந்திய குடியரசு தின விழா சிறப்பு விருந்தினராக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வர உள்ளார் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் பிரிட்டன் மருத்துவ சங்கக் கவுன்சிலின் தலைவரான டாக்டர் சாந்த் நாக்பால் கூறுகையில்,இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்,இந்தியா குடியரசு தின விழாவில் பங்கேற்பாரா என்பது தொடர்பாக தற்போது எதுவும் உறுதியாக கூற முடியாது.
ஆனால், இப்போது இருக்கும் சூழ்நிலையைப் பார்க்கும்போது,
அவர் குடியரசு தின விழாவில் பங்கேற்பது சந்தேகம் தான் என்று தெரிவித்துள்ளார்.ஆகவே போரிஸ் ஜான்சன் புதிய வகை கொரோனா வைரஸ் காரணமாக, இந்தியா வருவது கேள்விக்குறியாகியுள்ளது.