பிலிப்பைன்ஸில் பிராத்தனை கூடத்தில் குண்டு வெடிப்பு… 3 பேர் பலி, 9 பேர் காயம்
பிலிப்பைன்ஸின் தெற்கு பகுதியில் உள்ள மராவி நகரின் மிண்டானோ பல்கலைக்கழக உடற்பயிற்சி கூடத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பெரும் வெடிவிபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. உள்ளூர் நேரப்படி இன்று காலை 7 மணியளவில் கிறிஸ்தவர்களின் சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சி பல்கலைக்கழக உடற்பயிற்சி கூடத்தில் நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவர்களும், ஆசிரியர்களும் கலந்து கொண்டபோது இந்த வெடிப்பு நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை உள்ளூர் போலீசார் தெரிவித்தனர். இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 9 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவர்களின் மூன்று பெண்களும், ஒரு ஆண் என ராணுவத்தின் முதலாவது காலப்படை பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கேப்ரியல் விரே தெரிவித்தார். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குண்டு வெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட வெடிபொருள் வகை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன. “மதக் கூட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறை சம்பவத்தால் நாங்கள் மிகவும் வருத்தமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளோம். இந்த முட்டாள்தனமான மற்றும் கொடூரமான செயலை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம்” என மிண்டானோ மாநில பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் மராவி நகரில் பல ஆண்டுகளாக ராணுவம் மற்றும் போலீசாரின் கட்டுப்பாடுகளை மீறி இஸ்லாமிய போராளிகள் நடமாடி வருகின்றனர். அங்கு பல ஆண்டுகளாக பிரிவினைவாத கிளர்ச்சிகள் ஏற்பட்டு அமைதியற்ற சூழல் நிலவி வருகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு மோரோ இஸ்லாமிய விடுதலை முன்னணி அரசுடன் சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஆனால் இந்த ஒப்பந்தத்தை ஏற்காத சில சிறிய குழுக்கள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது.