விமானம் மூலம் ஆயிரம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஊருக்கு அனுப்பி வைத்த பாலிவுட் சூப்பர் ஸ்டார்.!
1000 புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக 6 விமானங்களை ஏற்பாடு செய்து அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன் உதவி செய்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக ஜூன் 30 வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஒரு சில தளர்வுகளை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. மேலும் இந்த பொது முடக்கத்தால் பலர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்வு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல இயலாமல் பலரும் நடந்து சென்றும் வருகின்றனர். வேலையில்லாமல் கைகளில் காசு இல்லாமல் பட்டினியில் வாடும் இவர்களுக்காக பலர் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். பல பிரபலங்கள் இவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க உதவி செய்து வருகின்றனர்.
சமீபத்தில் கூட பிரபல பாலிவுட் நடிகரான சோனு சூட் தனது சொந்த செலவில் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார். அதுமட்டுமின்றி மும்பையில் சிக்கி தவித்த 200 தமிழர்களை தமிழகத்திற்கு செல்ல வழி வகுத்து கொடுத்தார்.இந்நிலையில் தற்போது பிரபல பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சன் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊருக்கு செல்ல உதவியுள்ளார். ஆம் மும்பையில் இருந்து உத்தரபிரதேசத்தில் உள்ள கோரக்பூர், அலகாபாத் மற்றும் வாரணாசி ஆகிய இடங்களுக்கு தலா இரண்டு விமானங்கள் வீதம் ஆயிரம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அனுப்பி வைக்க ஏற்பாடு செய்துள்ளார். தற்போது அமிதாப் பச்சனின் இந்த செயலுக்கு பலர் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.