போகி பண்டிகையின் வரலாறும்..! அதனை கொண்டாடுவதற்கான காரணமும்..!
- தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்கு முதல் நாள் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
- ‘ பழையன கழிதல் புதியன புகுதல் ‘ இதுதான் போகி பண்டிகையின் அர்த்தம்.
நம் முன்னோர்கள் ஒருவித சடங்குகளை சம்பிரதாயங்களை வைத்திருந்தனர். அதற்கு பின்னால் அர்த்தமுள்ள நல்ல விஷயங்கள் கண்டிப்பாக இருக்கும். அதனை தவிர்த்து அது மூடநம்பிக்கை என நாம் பெரும்பாலானவற்றை ஒதுக்கிவிட முடியாது. ஒதுக்கி விடவும் கூடாது.
போகி பண்டிகை அன்று பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்துவது காற்று மாசுபடும் என்பது தற்போதுள்ள காலகட்டத்தில் வேண்டுமானால் சரியாக இருக்கலாம். ஆனால், அன்றைய காலகட்டத்தில் பிளாஸ்டிக் பைகள் எதுவும் கிடையாது. பழைய வீட்டு ஓலைகள் போன்ற உளர் தாவர பொருட்களை தான் தீயிட்டு கொளுத்தினர்.
அந்த காலத்தில் பணப்புழக்கம் அதிகமாக கிடையாது. விவசாயம் செய்து அறுவடை முடிந்த பின்னர்தான் கையில் வரவு இருக்கும். அப்படி வரும் நன்னாளை நம் வீட்டை சுத்தம் செய்து வரவேர்க்காமல், பணம் வந்த பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று இருக்காமல் நம்மால் இயன்ற பொருள்களை வாங்கி வீட்டை சுத்தம் செய்து, வீட்டில் உள்ள பழைய பொருள்களை முக்கியமாக ஓலை வீடுகளில் உள்ள பழைய ஓலைகளை அகற்றி விட்டு புதிய ஓலைகள் கொண்டு வீடு மேய்வது. பழைய ஓலைகளை மற்றும் பழைய பொருட்களையும் எரிப்பது அல்லது போக்குவது தான் போகி பண்டிகை ஆகும். அன்றைய நாள் வீட்டில் உள்ள பழைய பொருட்களை கழித்து வீட்டிற்கு புது வர்ணம் பூசி தை முதல் நாளை கோலாகலமாக வரவேற்க வேண்டும்.
அன்றைய நாளில் வீட்டினை சுத்தம் செய்து வீட்டு வாசலில் வேப்பிலை, தும்பை இலை, துளசி, ஆவாரம்பூ, சிறுபீளை ஆகிய தாவரங்களை ஒன்றாக கட்டி வீட்டு வாசலில் காப்பு கட்டி வைக்க வேண்டும். வேப்பிலை. காற்றில் உள்ள கிருமிகளை அழிக்க வல்லது. தும்பை இலை தலைவலியை போக்கும். மாவிலை உடலுக்கு சுறுசுறுப்பை தரும். துளசி மருத்துவ குணம் வாய்ந்தது. இவ்வாறு நாம் வாசலில் கட்டி வைக்கும் அனைத்து தாவரங்களும் மருத்துவ குணம் கொண்டவை.
மேலும், மாவிலையும் வேப்பிலையும் நம் வீட்டிற்குள் கெட்ட சக்தியை அண்டவிடாது என்பது ஆன்மீக நம்பிக்கை. இதன் காரணமாகத்தான் நம்முன்னோர்கள் பொங்கலுக்கு முதல்நாள் இந்த காப்பை கட்டி தை முதல் நாளை ஆரோக்கியமாகவும் எந்தவித கெட்ட சக்தியும் அண்டாமல் இருக்கவும் ஒரு சம்பிரதாயமாக இந்தனை வைத்திருந்தனர். அதனையே நாமும் பின்பற்றி ஆரோக்கியமான வாழ்வை தை முதல் நாளிலிருந்து ஆரம்பிப்போம்.