சாண்டியாகோ கடற்கரையில் பாறையில் மோதிய படகு…! 4 பேர் உயிரிழப்பு…!
சாண்டியாகோ கடற்கரையில் பாறையில் மோதிய படகு. 4 பேர் உயிரிழப்பு.
கலிபோர்னியாவில் குடியேறுபவர்களை கடத்த முயன்றதாக சந்தேகிக்கப்படும் படகு ஒன்று, சாண்டியாகோ கடற்கரையின் பாயிண்ட் லோமாவில் உள்ள காப்ரிலோ தேசிய நினைவுச்சின்ன பாறையில் மோதி உடைந்து உள்ளது. இதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 24 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக அமெரிக்க கடலோரக் காவல்படை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சாண்டியாகோ தீயணைப்பு துறையினரின் லெப்டினன்ட் ரிக் ரோமெரோ கூறுகையில், நாங்கள் சம்பவ இடத்திற்கு சென்ற போது சிலர் தண்ணீரில் மூழ்கி இருந்தனர். மேலும் சில கடற்கரையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் கடுமையான சூழலுக்குள் சிக்கிக்கொண்டனர். மேலும் 30 பேர் அந்தப் படகில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து எல்லை ரோந்து முகவர் ஜெஃப் ஸ்டீபன்சன் கூறுகையில், இந்த படகை பார்க்கும் போது ஒரு கடத்தல் கப்பல் போல தெரிகிறது. இது சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் குடியேறுபவர்கள் கடத்த பயன்படுகிறது என்றும், படகில் இருந்த மக்களின் சொந்த நாடு குறித்து தெரியவில்லை என்றும், கேப்டன் காவலில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.