கீழடி அகழாய்வை தொடர உயர்நீதிமன்ற கிளை உத்தரவு தமுஎகச வரவேற்பு
கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வுப் பணிக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று மத்திய தொல்லியல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளதை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் – கலைஞர்கள் சங்கம் வரவேற்றுள்ளது. சங்கத்தின் மாநிலத் தலைவர் ச.தமிழ்ச்செல்வன், மாநில பொதுச் செயலாளர் சு.வெங்கடேசன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, கீழடியில் அகழாய்வை தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டும் என்று தமுஎகச தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இதற்காக மாநாடுகளையும், போராட்டங்களை யும் முன்னெடுத்து வருகிறது. ஆனால், பாஜக தலைமையிலான மத்திய அரசு, கீழடி அகழாய்வை முடக்குவதிலேயேமுனைப்பாக உள்ளது. இந்த கெடு நோக்கத்துடன் தான்கீழடி அகழாய்வு கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் மாற்றப்பட்டு, ஸ்ரீராமன் நியமிக்கப்பட்டார். அவர் முறையான ஆய்வு நடத்தாமல் மூன்றாம் கட்ட அகழாய்வில் எதுவும் கிடைக்க வில்லை. எனவே இம்மாதம்30 ஆம் தேதியுடன் பணிகள் முடிவடையும் என்று கூறிவந்தார். இந்நிலையில், கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வுக்கு மத்திய தொல்லியல் துறை உரிமம் வழங்க வேண்டும் என்றும், இதில் தமிழக அரசும் பங்கேற்பதற்கான உரிமத்தை இரண்டு வாரத்தில் வழங்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை வெளியிட்டுள்ள உத்தரவை தமுஎகச வரவேற்கிறது.
ஸ்ரீராமனால் அகழாய்வுப் பணியில் தொய்வு ஏற்படுவதாக, ஆய்வுக்கு நிலம் தந்த விவசாயி சந்திரன் நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ள நிலையில், ஆய்வு செம்மையாக நடைபெற ஸ்ரீராமனை மாற்றிவிட்டு, அமர்நாத் ராமகிருஷ்ணாவை மீண்டும் நியமிக்க வேண்டும் என்றும் தமுஎகச வலியுறுத்துகிறது. அருங்காட்சியகம் அமைப்பதற்கான பணிகளையும் உடனடியாக துவக்க வேண்டும். இதே போன்று, இராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளத்தில் மாநில தொல்லியல் துறை மேற்கொண்டுள்ள அகழாய்வையும் நிறுத்தாமல் தொடர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது