இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க அரசு செயல்படுத்த உள்ள திட்டங்கள் என்னென்ன?- ராமதாஸ் கேள்வி
சென்னை : படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்காக என்னென்ன திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தப் போகிறது என்பதை ஆட்சியாளர்கள் தெரிவிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”தமிழ்நாட்டில் அரசுத்துறை மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்புகள் தொடர்பாக வெளியாகியுள்ள புள்ளி விவரங்கள் பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கின்றன. இந்தியாவின் மற்ற மாநிலங்களில் நிலவும் சூழலுக்கு மாறாக தமிழகத்தில் வேலைவாய்ப்பு குறைந்து வருவதே அதற்குக் காரணமாகும்.
தமிழகத்தில் வேலைவாய்ப்பு குறைந்து வருவது பற்றி கடந்த 11-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில் புள்ளி விவரங்களுடன் விளக்கியிருந்தேன். அதை உறுதி செய்வது போன்று மேலும் பல ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. புகழ்பெற்ற தனியார் வேலைவாய்ப்பு இணையதளம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கடந்த ஜூன் மாதத்தில் சென்னையில் தனியார் வேலைவாய்ப்புகள் அதற்கு முந்தைய ஆண்டின் ஜூன் மாதத்தை விட 12 விழுக்காடு குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவிலுள்ள பெரிய நகரங்களில் சென்னையில் மட்டும் தான் வேலைவாய்ப்பு விகிதம் மிக மோசமாக குறைந்திருக்கிறது.
நாடு முழுவதும் வேலைவாய்ப்புகள் குறைந்து வருகின்றன, அதனால் சென்னையிலும் வேலைவாய்ப்பு குறைந்திருக்கிறது என்று இதை எளிதாக கடந்து போய்விட முடியாது. ஏனெனில், இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டக் காலத்தில் இந்தியா முழுவதும் தனியார் துறை வேலைவாய்ப்புகள் 11% அதிகரித்துள்ளன. மேற்குவங்கத் தலைநகர் கொல்கத்தாவில் வேலைவாய்ப்பு 40% அதிகரித்துள்ளது. பரோடாவில் 36%, அகமதாபாத்தில் 20%, மும்பையில் 15%, ஹைதராபாத்தில் 5%, பெங்களூருவில் 3% வீதம் தனியார் துறை வேலைவாய்ப்புகள் அதிகரித்திருக்கின்றன.
சென்னையில் தனியார் துறை வேலைவாய்ப்புகள் வீழ்ச்சியடைந்திருப்பது சென்னையில் மட்டும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்றல்ல. தமிழகத்தின் பெரும்பான்மையான மாவட்டங்களைச் சேர்ந்த படித்த இளைஞர்கள் தங்களின் வேலைவாய்ப்புக்காக சென்னை மாநகரையே சார்ந்துள்ளனர். அதனால் சென்னையில் தனியார்துறை வேலைவாய்ப்புகள் குறைந்திருப்பது ஒட்டுமொத்த தமிழகத்தின் சமூக, பொருளாதார சூழலில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
மற்றொரு புறம் அரசு வேலைவாய்ப்பகங்கள் மூலம் வழங்கப்படும் வேலைவாய்ப்புகளும் குறைந்துள்ளன. 2016-17ஆம் ஆண்டில் வேலைவாய்ப்பகங்கள் மூலம் வழங்கப்பட்ட அரசு வேலைவாய்ப்புகள் 5802 மட்டுமே. இது அதற்கு முந்தைய ஆண்டில் வழங்கப்பட்ட 9596 அரசுப் பணிகளை விட 36% குறைவு ஆகும். அதேபோல், கடந்த ஆண்டில் வேலைவாய்ப்பகங்கள் மூலம் வழங்கப்பட்ட தனியார் துறை வேலைவாய்ப்புகளும் 66% குறைந்துள்ளன. 2015-16ஆம் ஆண்டில் தனியார் நிறுவனங்களில் அரசு வேலைவாய்ப்பகங்கள் மூலமாக 61,752 பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ள நிலையில், கடந்த ஆண்டு வெறும் 20,778 பேருக்கு மட்டுமே தனியார் நிறுவனங்களில் வேலை கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அரசுத் துறை வேலைவாய்ப்புகள் கடந்த 20 ஆண்டுகளாகவே குறைந்து வரும் நிலையில், இந்த ஆண்டும் அதே போக்கு தொடர்வது பெரிய அளவில் அதிர்ச்சியையோ, வியப்பையோ ஏற்படுத்தவில்லை. ஆனால், படித்த இளைஞர்களுக்கு வாழ்வாதாரமாக திகழும் தனியார் துறை வேலைவாய்ப்புகள் குறைந்து வருவது தான் படித்த இளைஞர்களின் எதிர்காலம் குறித்த அச்சத்தை ஏற்படுத்துகிறது.
தனியார் துறை வேலைவாய்ப்புகளில் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் காமராசர் காலத்தில் விதைக்கப்பட்ட நல்விதைகளால் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் மிகவும் அதிகமாக 37,455 தனியார் தொழிற்சாலைகள் உள்ளன. இது ஒட்டுமொத்த இந்தியாவிலும் உள்ள ஆலைகளில் 16.60% ஆகும். தமிழகத்தில் இந்த அளவுக்கு தனியார் தொழிற்சாலைகள் இருப்பது வரப்பிரசாதமாகும்.
ஆனால், இவ்வளவு தனியார் தொழிற்சாலைகள் இருந்தும் சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் தனியார்த்துறை வேலைவாய்ப்புகள் குறைந்து வருவதற்கு காரணம் தொழில் மற்றும் உற்பத்தித் துறை வளர்ச்சி குறைந்து வருவதுதான். கடந்த ஆண்டில் இந்த 2 துறைகளிலும் தமிழகம் கடைசி இடத்தை பிடித்திருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி கடந்த மாதம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. அதை நிரூபிக்கும் வகையில் தான் வேலைவாய்ப்புகள் குறித்த புள்ளிவிவரங்கள் அமைந்திருக்கின்றன.
ஒருபுறம் தமிழகத்திற்கு வர வேண்டிய முதலீடுகள் ஆந்திரா மற்றும் தெலங்கானாவுக்கு செல்வது, தமிழகத்திலுள்ள தொழிற்சாலைகள் அண்டை மாநிலங்களுக்கு இடம் பெயருவது, மறுபுறம் தமிழகத்தில் வேலைவாய்ப்புகள் குறைந்து வருவது ஆகியவை தமிழகம் எந்த திசையில் பயணிக்கிறது என்பதை உறுதி செய்கின்றன.
இந்த நிலையை மாற்றி படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்காக என்னென்ன திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தப் போகிறது? என்பதை ஆட்சியாளர்கள் தெரிவிக்க வேண்டும்… இல்லாவிட்டால் தங்களின் தோல்வியை ஒப்புக்கொண்டு ஆட்சியிலிருந்து விலக வேண்டும்” என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.