சம்பளத்தை கல்வித்துறைக்கு நன்கொடையாக அளித்த டிரம்ப்
அமெரிக்க குடியரசுத் தலைவர் டொனால்ட் டிரம்ப் தனது இரண்டாவது காலாண்டு சம்பளத்தை அமெரிக்க கல்வித்துறைக்கு நன்கொடையாக தந்துள்ளார்.
அமெரிக்க குடியரசுத் தலைவராக தான் வெற்றிபெற்றால், சம்பளம் வாங்கபோவதில்லை என்று தெரிவித்திருந்தார் டிரம்ப்.அமெரிக்க சட்டத்தின்படி. குடியரசுத் தலைவர் சம்பளம் வாங்க வேண்டும் என்பதால், தனக்கு வரும் சம்பளத்தை சமூக பணிகளுக்கு வழங்குவதாக டிரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்தார்.
தான் கூறியதை நிறைவேற்றும் விதமாக, அவர் பதவி ஏற்ற பிறகு, அவருக்கு கிடைத்த முதல் காலாண்டு சம்பளத்தை, தேசிய பூங்கா சேவைக்காக நன்கொடையாக கொடுத்தார். அதேபோல் தனது இரண்டாவது காலாண்டு சம்பளத்தை அமெரிக்க கல்வி துறைக்கு நன்கொடையாக தந்துள்ளார்.
“டிரம்ப் அமெரிக்க மாணவ மாணவிகள் மீது அதிக அக்கறை கொண்டவர். அமெரிக்காவின் ஒவ்வொரு குழந்தைக்கும் உயர்ந்த மற்றும் தரமான கல்வியை தர வேண்டும் என்று விருப்பம் கொண்டவர். அதேபோல் அமெரிக்காவில் கல்வி சீர்திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று எண்ணம் கொண்டுள்ளார்” என்று வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் STEM என்று குறிப்பிடப்படும் ‘அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் மாணவர்கள் நல்ல முறையில் கவனம் செலுத்துவது அவசியம். STEM முகாம்கள் கல்வி துறையால் நடத்தப்படும். அந்த முகாம்களை நடத்த தேவையான பணத்தை டிரம்பின் நன்கொடையில் இருந்து எடுத்துக்கொள்ளப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.