புவி வெப்பம் அதிகரிப்பால் உருகியது ஸ்காட்லாந்து பனிமலை
லண்டன்: புவி வெப்பம் அதிகரிப்பால் ஸ்காட்லாந்து பனி மலை முற்றிலுமாக உருகிவிட்டது. கடந்த 300 ஆண்டுகளில் 7 முறை மட்டுமே இந்த பனிமலை முற்றிலும் உருகியுள்ளது குறிப்பிடத்தக்கது. பிரிட்டீஷ் தீவுகளில் அமைந்துள்ள 3வது உயரமான மலைப் பகுதி பிராரியாக். இதன் உயரம் 4,252 அடி. இங்குதான் ஸ்காட்லாந்தின் மிக நீளமான பனிமலை உள்ளது. இது பீனிக்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு பனிச் சறுக்கு விளையாட்டுகள் நடந்து வந்தன. மலை ஏறும் வீரர்களும், இங்குள்ள பனிமலைகளில் ஏறி வந்தனர். தற்போது இந்த பனிமலை முற்றிலும் உருகிவிட்டது. இதற்கு முன் கடந்த 2006, 2003, 1996, 1959, 1953, 1933ம் ஆண்டுகளில் இந்த மலை உருகியுள்ளது.
ஸ்காட்லாந்து மலைத் தொடரில் உள்ள அனாக் பீக் என்ற பனிமலையும் கடந்த வாரம் உருகிவிட்டது. கடந்த 11 ஆண்டுகளில் முதல் முறையாக இந்த பனிமலை முற்றிலுமாக உருகியுள்ளது. பென் நெவிஸ் மலைப் பகுதியிலும் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பனி முற்றிலும் இல்லாமல் இருந்தது. கடந்த 10 ஆண்டுகளில், இந்தாண்டுதான் இங்கு பனிச் சரிவு சம்பவங்களும் மிக குறைவாக நடந்துள்ளன.
ஸ்காட்லாந்தின் பனிமலைப் பகுதியில் கோடை காலத்தில் கூட பனி இருக்கும். ஆனால் இந்தாண்டு குளிர்காலத்தில் கூட பனி படர்வது அரிய நிகழ்வாகவே உள்ளது. இது இங்குள்ள ‘ஸ்கை – ஸ்காட்லாந்து’ என்ற தேசிய பனிச்சறுக்கு விளையாட்டு அமைப்பினரை மிகவும் கவலையடைச் செய்துள்ளது. உலக புகழ்ப்பெற்ற மழை ஏறும் வீரர் ஹமீஸ் மெக்கின்ஸ் கூறுகையில், ”கடந்த 1945ம் ஆண்டுக்குப்பின் கடந்த 2013-14ம் ஆண்டில் இங்கு அதிக பனி இருந்தது” என கூறியுள்ளார். புவி வெப்பம் அதிகரிப்பதே இதற்கு காரணம் என உயிரியல் விஞ்ஞானி டாக்டர் ஆதம் வாட்சன் கூறுகிறார்.