அங்கீகாரம் இல்லாத பள்ளிகளுக்கு கல்வி கட்டணம் நிர்ணையிக்கப்படமாட்டது…..!
தமிழகத்தில், மாநில பாடத்திட்டத்தின் கீழ், நர்சரி, மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் என, 12 ஆயிரம் பள்ளிகள் செயல்படுகின்றன. இந்த பள்ளிகளில், கல்வி கட்டணம் நிர்ணயம் செய்ய, கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டியின் தலைவராக, ஓய்வுபெற்ற, உயர் நீதிமன்ற நீதிபதி மாசிலாமணி, இரண்டு மாதங்களுக்கு முன் பொறுப்பேற்றார். நடப்பு கல்வி ஆண்டுக்கான கல்வி கட்டணம் நிர்ணயிக்கும் பணி, மும்முரமாக நடந்து வருகிறது. தமிழகம் முழுவதும், 12 ஆயிரம் பள்ளிகளுக்கு, ‘நோட்டீஸ்’ அனுப்பி, கட்டண விசாரணை நடக்கிறது. முதற்கட்டமாக, 6,000 நர்சரி, பிரைமரி பள்ளிகளுக்கு, கட்டண நிர்ணய விசாரணை முடிந்துள்ளது. 6,500 மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளுக்கு, ஒரு வாரத்திற்கு முன், விசாரணை துவங்கி உள்ளது.இதில், பல பள்ளிகள் உரிய சான்றிதழ்கள், ஆவணங்கள் இன்றி, மனுக்களை சமர்ப்பித்துள்ளன. அதில், அங்கீகார சான்றிதழ், கட்டட உறுதி சான்றிதழ், தீயணைப்பு துறை உரிமம் போன்ற முக்கிய ஆவணங்கள் இன்றி, கட்டண நிர்ணயம் செய்ய கோரிக்கை விடுத்தன.கட்டட உறுதி சான்றிதழ், அங்கீகார கடிதம் போன்ற ஆவணங்கள் இல்லாத, பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்படாது என, நீதிபதி மாசிலாமணி உத்தரவிட்டுள்ளார். அதனால், சான்றிதழ் இல்லாத பள்ளிகளின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.