இந்திய இராணுவ ஓய்வுதியத்திலும் முறைகேடு:இந்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி(சி.ஏ.ஜி.)
புதுடில்லி : இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற சுமார் 25 லட்சம் பேருக்கு ஆண்டுதோறும் ராணுவ அமைச்சகம் மூலம் சுமார் ரூ.60,000 கோடி ஓய்வூதியமாக வழங்கி வருகிறது. இந்நிலையில் இந்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி(சி.ஏ.ஜி.) ராணுவ அமைச்சகம் குறித்த தனது தணிக்கை அறிக்கையை சமீபத்தில் மத்திய அரசிடம் தாக்கல் செய்தது.தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியின் இந்த அறிக்கை பார்லி., இரு அவைகளிலும் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் ஓய்வூதியம் வழங்கப்பட்டத்தில் காணப்பட்ட குறைபாடுகள், முறைகேடுகள் குறித்து சி.ஏ.ஜி. ராணுவ அமைச்சகத்தின் மீது கடும் அதிருப்தி தெரிவித்து இருந்தது.சிஏஜி தாக்கல் செய்த அறிக்கையில், ஆய்வுக்காக ஒரு மாதத்தில் ஓய்வூதியம் பெற்றவர்களை எடுத்துக்கொண்டதில் 21,434 பேருக்கு அவர்களின் அசல் ஓய்வூதியத் தொகையைவிட ரூ.106 கோடியே 17 லட்சம் குறைவாக பணம் வழங்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இது ஒட்டு மொத்தமாக 5 ஆண்டுகளுக்கு ரூ.228 கோடியே 85 லட்சமாக இருக்க வாய்ப்பு உள்ளது. மாற்றியமைத்த ஓய்வூதிய விகிதத்தை பயன்படுத்தாதது, தவறான கணக்கீடு, மருத்துவ படியில் திருத்தம் செய்யாதது போன்றவை இதற்கான முக்கிய காரணங்கள் ஆகும்.இதேபோல் ஒரு மாதத்தில் ஓய்வூதியம் பெற்றவர்களை ஆய்வுக்காக கணக்கிட்டதில் 11,973 பேருக்கு கூடுதலாக ரூ.118 கோடியே 23 லட்சம் வழங்கப்பட்டு உள்ளது. இது கணக்கில் கொள்ளப்பட்ட 5 ஆண்டுகளுக்கு ரூ.518 கோடியே 70 லட்சமாக இருக்கலாம். இதில் சிலருக்கு, 2 முறை பணம் வழங்கியது, பணத்தை வழங்குவதில் ஏற்பட்ட இதர குளறுபடிகள், முறைகேடுகள், பணம் வழங்கும் உத்தரவே இன்றி பணத்தை வங்கிக்கணக்கில் செலுத்தியது போன்றவை அடங்கும்.
ஓய்வூதிய கணக்குகளில் காணப்படும் இதுபோன்ற பல்வேறு குளறுபடிகளால் ஒட்டுமொத்தமாக கடந்த 5 ஆண்டுகளில் ரூ.6,831 கோடியே 95 லட்சம் ரூபாய் ராணுவ அமைச்சகத்துக்கு இழப்பு ஏற்பட்டு இருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.